இந்த தொழில் செய்வோருக்கு ஏற்றம் - சிம்ம ராசிக்கு கண்டகச் சனி - 2023ம் ஆண்டு சனிப்பெயர்ச்சி பலன்கள்
17.01.2023 அன்று நிகழவுள்ள சனிப்பெயர்ச்சியில் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, சிம்ம ராசி அன்பர்களுக்குக் கண்டகச் சனியாக வந்து அமரவுள்ளார் சனிபகவான்.
இதுவரையிலும் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் மகரத்தில் இருந்த சனிபகவான், இப்போது 7-ம் இடமாகிய கும்பத்துக்குப் பெயர்கிறார்.
இந்தக் காலகட்டத்தில் திருமண விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. அதேநேரம் இந்த ராசி அன்பர்களுக்கு வீடு, வாகன யோகம் உண்டு.
சிலருக்குப் புதிய தொழில் தொடங்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அமை யும். கடன் தொல்லைகள் தீர வழி பிறக்கும்.வெளிநாடு செல்வதற்கு, இதுவரையிலும் இருந்த தடைகள் நீங்கும். பருவ வயதில் இருப்பவர்கள், புதிய அறிமுகங்கள் - நட்புக்களிடம் கவனமுடன் பழக வேண்டும்.
பண விவகாரங்களில் ஏமாற்றம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். புதிய வாகனம் வாங்குவதும் மாற்றுவதும் சாதகமாகும். ஆலய வழிபாடுகள், ஆன்மீக சிந்தனைகள், பணிகள் உங்களுக்கு இந்தக் காலக் கட்டத்தில் கைகொடுக்கும்.
பெண்களுக்கு: ஏற்றத்தாழ்வுகள் உள்ள காலம். கர்ப்பிணிகள் மருந்து உட்கொள்ளல், பயணம், அன்றாட வேலைகளில் கவனமுடன் இருக்க வேண்டும். பூரம் நட்சத்திரக்கார பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்குப் பணியிடத்தில் கவனம் தேவை. மகம் நட்சத்திரக்காரப் பெண்களுக்கு வாக்கில் கவனம் வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சற்றுக் குடும்பப் பொறுப்புகள், அலுவலகப் பொறுப்புகள் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு: படிப்பில் முன்னேற்றம் உண்டு. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பெண் குழந்தைகளுக்கு மன உறுதி வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களிடத்தில் பழகும்போது எச்சரிக்கை தேவை முடிந்தவரை பெற்றோர்களுடன் இருப்பது நல்லது. சனிக்கிழமைகளில் `ராம ஜயம்' ஜபிப்பதும் எழுதுவதும் நன்று; கிரக தோஷங்கள் தீரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு: பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஒருசிலருக்கு வெளியூர் மாற்றம் ஏற்படலாம். இது எதிர்பாராத ஒன்றாக அமைய உள்ளது. அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு, உயர் அதிகாரியிடம் பேசும்போது கவனம் வேண்டும். வேலை நேரங்களில் உங்களின் சிந்தனை மற்றும் செயலில் அதீத கவனம் இருந்தால் நன்மை ஏற்படும்.
வியாபாரிகளுக்கு: சிறுதொழில் செய்பவர்களுக்கு நல்ல சிறப்பான காலம் இது. ரியல் எஸ்டேட் மற்றும் எண்ணெய் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் ஏற்படும். கூட்டுத்தொழில் புதியவர்களைச் சேர்ப்பதிலும் இணைந்து பணியாற்றுவதிலும் கூடுதல் கவனம் தேவை; அவர்களால் சிற்சில இழப்புகள் ஏற்படலாம். தொழில் விரிவாக்க நடவடிக்கைகளிலும் வேகம் கூடாது. தகுந்தவர்களிடம் ஆலோசனைப் பெற்று, அதன்படி செயல்படுவதால் வெற்றியும் லாபமும் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை சாற்றி ஆஞ்சநேயரை வணங்கவும். மாதம் ஒருமுறை அனுமனுக்கு வெண்ணெய்க் காப்பு சாற்றி, தயிர் சாதம் அன்னதானம் செய்யலாம். காணிப்பாக்கம் விநாயகர் மற்றும் திருநள்ளாறு சனீஸ்வரரை தரிசித்து வருவது சிறப்பு.