இயக்குனராக ரீ என்ட்ரி கொடுத்து முந்தானை முடிச்சு படத்தை இயக்கவுள்ள பாக்யராஜ்
இந்திய சினிமாவிலேயே தான் இயக்கிய 27 படங்களில் 24 படங்களில் தானே இயக்கி தானே ஹீரோவாக நடித்த ஒரே இயக்குனர் தான் கே.பாக்யராஜ். 1979 ஆம் ஆண்டு முதன் முதலாக இவர் இயக்கிய சுவரில்லாத சித்திரம் ப்ளாக்பஸ்டரானதை அடுத்து பல படங்களை இயக்கி வந்தார். 80 களில் சினிமாவில் இவரது பெயரில்லையென்றால் இன்று தமிழ் சினிமா இவ்வளவு அபார அடைந்திருக்குமா என கூட தெரியாது.
அந்த அளவிற்கு தான் இயக்கும் ஒவ்வொரு படங்களிலும் பெண்களை மையமாக வைத்து கதையை எழுதி நடித்தும் வந்தார். இவரது இயக்கத்தில் வந்த சில படங்கள் அன்றைய காலத்தில் புரட்சியையும் ஏற்படுத்தியது எனலாம். அப்படிப்பட்ட திரைப்படம் தான் 1983 ஆம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சி திரைப்படம். மனைவியின் இழப்பிற்கு பின் வாத்தியாராக கிராமத்துக்கு வரும் பாக்யராஜ், கதாநாயகியாக வலம் வரும் ஊர்வசியின் குறும்பு விளையாட்டில் மாட்டிக்கொள்வார்.
கைக்குழந்தையுடன் வந்த பாக்யராஜை ஒருதலையாக காதலித்து பின்னர் அடம்பிடித்து திருமணமும் செய்துகொள்வார் ஊர்வசி. பாக்யராஜை தன் வசம் காதலிக்க வைக்க முருங்கைக்காய் பொரியல், குழம்பு, வறுவல் என ஊர்வசி பாக்யராஜிற்கு இரவு உணவு பரிமாறும் அந்த காட்சி, தமிழ் சினிமாவில் இன்று வரை மீம்ஸ்களில் போட்டு நெட்டிசன்கள் தெறிக்கவிடுவார்கள்.
அப்படிப்பட்ட இப்படம் 25 வாரங்களுக்கு மேல் பல திரையரங்குகளில் ஓடியது. இப்படத்தின் வெள்ளிவிழாவில் அன்றைய முதலமைச்சராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். வெறும் 30 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 4 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது. இதனிடையே இப்படத்தின் ரீமேக்கை உருவாக்க இயக்குனர் பாக்யராஜ் களமிறங்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என இப்படம் அன்று அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு ரிலீசான நிலையில், தற்போது மீண்டும் ரீமேக் செய்யப்படும் இப்படத்தில், பாக்யராஜ் கதாபாத்திரத்தில் நடிகர் சசிகுமாரும், ஊர்வசி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்க கமிட்டாகியுள்ளனர். மேலும் இப்படத்தின் முக்கியமான முருங்கைக்காய் காட்சிக்கு பதிலாக வேறு ஏதேனும் காட்சியை வைக்கலாமா எனவும் பாக்யராஜ் யோசித்து வருகிறாராம்.
சசிகுமார் அண்மைக்காலமாக நடித்து வரும் படங்கள் தோல்வியுற்று வருவதால், அவரது மார்க்கெட் கடுமையாக சரிந்துள்ளது. ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் பல வெற்றிப்படங்களில் நடித்து வரும் நிலையில், இவர்களின் காம்போ சற்று புதியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாக்யராஜின் ரீ என்ட்ரியில் அவருடைய படத்தையே ரீமேக்கில் பார்க்க ரசிகர்கள் சற்று ஆர்வம் காட்டித்தான் வருகிறார்கள்.