அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
காலை 10:30 மணிக்கு விசாரணை தொடங்கியதில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தடைக்கு எதிராக வாதங்களை முன்வைத்தனர். அதன்பின், இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தன.
இந்நிலையில், இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதால், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி குமரேஷ்பாபு ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில் எழுத்துப்பூர்வ வாதங்களை வெள்ளிக்கிழமை காலைக்குள் தாக்கல் செய்ய ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.