திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரியில் முன்னாள் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் தேடப்பட்டு வந்த நடன ஆசிரியர் ஹரிபத்மன் கைது
சென்னை, திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரியில் முன்னாள் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் தேடப்பட்டு வந்த நடன ஆசிரியர் ஹரிபத்மனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரி மாணவிகள் இரண்டு நாட்கள் உள்ளிருப்பு போரட்டம் நடத்திய நிலையில், கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மாணவி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஹரிபத்மன் மீது புகார் அளித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு முதுநிலை படிப்பின் போது பேராசிரியர் ஹரிபத்மன் பாலியல் ரீதியாகவும், தவறான நோக்கத்தில் தொடர்ச்சியாக நடந்து கொண்டதாகவும், இதன் காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் நடன ஆசிரியர் ஹரிபத்மன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
கலை நிகழ்ச்சிக்காக ஹைதரபாத் சென்றிருந்த ஹரிபத்மன் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை திரும்பியதாக கிடைத்த தகவலின் பேரில் இன்று அதிகாலை மாதவரத்தில் உள்ள அவரது நண்பர் வீட்டில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்லூரியின் இயக்குநர் ரேவதி மற்றும் துணை இயக்குனர் ஆகியோர் சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.