அமித்ஷாவின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

#China #India
Mani
1 year ago
அமித்ஷாவின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதியாக சீனா உரிமை கொண்டாடி வருவதால், அருணாச்சல பிரதேச எல்லைப் பிரச்னை இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து சர்ச்சையாக நீடித்து வருகிறது.

இந்தப் பிரச்னையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு அண்மையில் சீனா பெயர் மாற்றம் செய்துள்ளது. அங்குள்ள இடங்களுக்கு சீனப் பெயர்கள் சூட்டப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

சீனாவின் சமீபத்திய எல்லை மீறலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த அப்பட்டமான அத்துமீறலை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. அது எப்பொழுதும் இருக்கிறது என்று தெளிவாகக் கூறப்பட்டது.

அருணாச்சல பிரதேச விவகாரம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அருணாச்சல பிரதேசத்தின் சர்வதேச எல்லைக்கு சென்றார்.சீன எல்லையை ஒட்டியுள்ள கிபிது கிராமத்திற்கு சென்று சிறப்புரையாற்றினார்.

அருணாச்சல பிரதேசத்துக்கு அமித்ஷா வருகைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், “சாங்னான் (அருணாச்சல பிரதேசத்தின் சீன பெயர்) என்பது சீனாவின் ஒரு பகுதி. இந்தப் பகுதியில் இந்திய அதிகாரிகளின் நடவடிக்கைகள் சீனாவின் இறையாண்மையை மீறுவதாகும். இது எல்லைப் பகுதிகளில் அமைதிக்கு உகந்தது அல்ல. அதை உறுதியாக நிராகரிக்கிறோம்,'' என்றார்.