அவதூறு வழக்கை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது.
கடந்த மாதம் 23-ம் தேதி சூரத் நீதிமன்றம் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேல்முறையீட்டுக்கு ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டு, ஜாமீன் வழங்கப்பட்டது. தண்டனைக்கு மறுநாள் ராகுல் காந்தியின் மக்களவை எம்.பி.பதவி பறிக்கப்பட்டது.
அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சூரத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவுடன், வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை தனது சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், ஜாமீனை நீட்டிக்கக் கோரியும் இரண்டு மனுக்களையும் தாக்கல் செய்துள்ளார்.
ராகுல் காந்தியின் மனுவை பரிசீலித்து வரும் நீதிமன்றம், ஏப்ரல் 13ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தது.அதுவரை ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்தும், ஜாமீனை நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளது. மேலும் அடுத்த விசாரணையில் ராகுல் காந்தி ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராகுல் காந்தியின் தண்டனை ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.