கோடை காலத்தையொட்டி உதகை – குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கம்
கோடை காலத்தையொட்டி உதகை – குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை காலம் துவங்கி உள்ளதை அடுத்து ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தரத் தொடங்கியுள்ளனர். அவர்களை மகிழ்விக்கும் வகையில் உதகை – குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்தது.
அதன்படி, நீலகிரி சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கியுள்ளது. காலை 8.10 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்ட மலை ரயில் 9.40 மணிக்கு உதகை சென்றடைந்தது. இதேபோல் உதகையிலிருந்து மாலை 4.55 மணிக்கு புறப்பட்ட மலை ரயில் குன்னூருக்கு 5.55 மணிக்கு வந்தடைந்தது. இந்த ரயிலில் பயணம் செய்ய முதல் வகுப்பு கட்டணம் ரூ. 630, இரண்டாம் வகுப்பு கட்டணமாக ரூ. 465 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு மலை ரயிலில் 5 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்ததாகவும், ஒரே நேரத்தில் 120 பயணிகள் பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.