பின்லாந்து கல்வி முறை உலகில் முதலிடத்தில் இருப்பதற்குக் காரணங்கள் என்ன?
உலகின் மிகச் சிறந்த கல்வி முறையைக் கொண்ட நாடாகவும், உலகின் மகிழ்ச்சியான நாடாகவும், மிகத் தூய்மையான காற்றையும், சிறந்த சூழலையும் கொண்ட நாடாகவும் பின்லாந்து உள்ளது.
ஆரம்பத்தில் ஸ்வீடனின் ஒரு பகுதியாகவும் பின்னர் ரஷ்யப் பேரரசின் ஒரு பகுதியாகவும் இருந்த பின்லாந்து 1917-ல் சுதந்திரம் பெற்றது. 1995-ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்து 1999-ல் யூரோவை ஏற்றுக்கொண்டது.
இயற்கையான saunas, ரெயின்டீர்கள், Nokia மொபைல், சாண்டா கிளாஸ் கிராமம் எனச் சில உலகப்புகழ் பெற்ற விஷயங்களுக்குப் பெயர்போன பின்லாந்து 187,888 ஏரிகளைக் கொண்டு ஆயிரம் ஏரிகளின் நாடு என்றும் அழைக்கப்படுகிறது.
இவை எல்லாவற்றையும்விட முக்கியமாகப் பின்லாந்து என்றால் எல்லாருக்கும் உடனடியாக ஞாபகத்துக்கு வருவது அவர்களது உலகத் தரம் வாய்ந்த கல்வி அமைப்பு. தொடர்ச்சியாக உலகின் மிகச்சிறந்த கல்வித் திட்டத்துக்கான முதல் இடத்தை தட்டிச் செல்லும் பின்லாந்தில் அப்படி என்னதான் புதிதாக கற்றுக்கொடுத்து விடுகிறார்கள்?
உண்மையைச் சொன்னால் நம் நாடுகளைப் போலப் பிள்ளைகளை பரீட்சைக்கு தயார்ப்படுத்தும் இயந்திரமாக அவர்கள் வளர்ப்பதில்லை. ஆய கலைகள் அறுபத்து நான்கையும் தம் குழந்தை கற்றுத் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் எனத் துடிக்கும் நம் நாட்டு பெற்றோர் போல அவர்கள் இல்லை. போர்டில் எழுதியதை நோட்டில் பார்த்து காப்பி செய்து மனனம் பண்ணி ஒப்புவிக்கும் கிளிப்பிள்ளை கல்வி முறை அங்கு இல்லை.
கல்வி அனைவருக்கும் சம உரிமையாகக் கருதப்படுவதால், ஃபின்னிஷ் குடிமக்கள் மற்றும் EU/EEA நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இலவச கல்வி அணுகலை (முதன்மை முதல் உயர்நிலை வரை) ஃபின்னிஷ் அரசு வழங்குகிறது. சமத்துவத்தை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முழுமையான கற்பித்தல் மற்றும் கற்றல் சூழல் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்கள் ஆசிரியரால் உருவாக்கப்பட்ட தர நிர்ணய முறையுடன் தனித்தனியாகத் தரப்படுத்தப்படுவதால், 'Ranking System' இங்கு இல்லை. மேலும், பள்ளிகளின் பல்வேறு வரம்புகளின் மாதிரிக் குழுக்களின் மூலம் ஒட்டுமொத்த முன்னேற்றம் கல்வி அமைச்சகத்தால் வரைபடமாக்கப்படுகிறது.
நம் நாடுகளைப் போலப் பிறந்து முதலாவது வருடமே குழந்தைகளை பிளே ஸ்கூல், LKG, Kindergarten எனக் கொண்டு போய் அவர்களைச் சேர்ப்பதில்லை. ஃபின்னிஷ் குழந்தைகள் ஏழு வயதை எட்டும்போதுதான் தங்கள் கல்விப் பயணத்தை, அதாவது பள்ளிப்படிப்பைத் தொடங்குகிறார்கள். அதுவரை கற்றல் என்பது விளையாட்டு மூலம் அவர்களின் உடல், உள வளர்ச்சி மற்றும் 'Fine & Gross Motor Skills' போன்றவற்றைச் சீர்படுத்தி, மேம்படுத்தும் பயிற்சிகளே வழங்கப்படுகின்றன. ஏழு வயதில்தான் ஃபின்னிஷ் குழந்தைகள் பென்சில் பிடித்து முதல் எழுத்தை எழுதவே கற்றுக்கொள்கிறார்கள்.
பின்லாந்து கல்வி முறையில் 9 ஆண்டுகள் மட்டுமே கட்டாயக் கல்வி உள்ளது. அதன் பிறகு மாணவர்கள் கல்வி மற்றும் தொழில் ரீதியாக தங்களுக்கு எது சிறந்தது என்பதைக் கண்டறிய ஊக்குவிக்கப்படுகிறார்கள். கல்லூரிக் கல்விக்குத் திட்டமிடுபவர்கள், பழைய பட்டப்படிப்புக்குச் சிறந்த மாற்றீடாக, தொழிற்கல்விப் பள்ளிகள், பல்கலைக்கழகக் கல்வி அல்லது பயிற்சி வகுப்புகள் எனத் தொழில்முறை விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யலாம்.
மாணவர்களிடம் குழுப்பணி, ஒத்துழைப்பு மற்றும் குழு உணர்வின் திறன்களை வளர்ப்பதன் மூலம் பள்ளிகளில் போட்டியைவிட ஒத்துழைப்பை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது பின்னிஷ் கல்வித் துறை. மாணவர்களுக்கு அவர்களின் சொந்த வேகத்தில் கற்றுக்கொள்ள அவகாசம் அளிக்கப்படுகின்றது. இதுவும் பின்லாந்தில் உலகிலேயே சிறந்த கல்வி முறை இருப்பதற்கான ஒரு முக்கிய காரணம்.
எல்லாவற்றிலும் சிறந்ததாக இப்போது போற்றப்படும் ஃபின்னிஷ் கல்வி முறை ஆரம்பத்திலிருந்தே இவ்வளவு சிறப்பானதாக இருந்ததா என்றால் இல்லை. நாம் வரலாற்றில் பின்னோக்கிச் சென்றால், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்புதான் பின்னிஷ் அரசாங்கம் தனது கல்வி முறையை ஆராய்ந்து, எதிர்கால ஆண்டுகளில் கட்டாயமாகத் தேவைப்படும் என்ற ஊகத்தில், நிரூபிக்கப்படாத, சோதிக்கப்படாத பல சீர்திருத்தங்களைச் சேர்த்தது. அடிப்படை ஆரம்பக் கல்வி நிலையிலிருந்து உயர்கல்வி நிலைக்குச் செல்லும் முழுக் கட்டமைப்பும் மறுவடிவமைக்கப்பட்ட போது, அது மாணவர்களின் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தும் குறிக்கோளுடன் மீண்டும் உருவாக்கப்பட்டது. இன்று அந்த மாற்றம் உலகுக்கே எடுத்துக்காட்டான ஒன்றாக உருவெடுத்து உள்ளது.
உலகில் கல்வியறிவு அதிகம் உள்ள நாடுகளில் பின்லாந்து 8வது இடத்தில் உள்ளது. உலகின் உயர்நிலைப் பள்ளி நிறைவு விகிதத்தில் பின்லாந்து மிக உயர்ந்த தரவரிசையில் உள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய போட்டி ஆய்வு, உலகில் மிகவும் நன்கு வளர்ந்த கல்வியைக் கொண்டதாகப் பின்லாந்தைத் தரவரிசைப்படுத்துகிறது.
உலகில் வாழச் சிறந்த நாடுகள் எவை என்பதைக் காட்டும் உலக மகிழ்ச்சி அறிக்கையை (Happiness Index) ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா சபை வெளியிடுகிறது. 2022-ன் அறிக்கையில் பின்லாந்து மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதாவது தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாகப் பின்லாந்து முடிசூட்டப்பட்டது. இது ஒன்றே பின்லாந்து வாழ்வதற்கு எவ்வளவு சிறப்பான இடம் என்பதைக் காட்டுகிறது