வேங்கைவயல் விவகாரத்தில் 8 பேர் ரத்த மாதிரி தர மறுப்பு
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் மரபணு சோதனைக்கு 8 பேர் ரத்தம் தர மறுப்பு தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் தலித் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த டிச. 26 ஆம் தேதி தெரியவந்தது.
இதுகுறித்து தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் வெளியே தெரியவந்த தொடக்கக் காலத்தில் இதே பகுதியைச் சேர்ந்தவர்களால் பயன்படுத்தப்பட்ட கட்செவி அஞ்சல் குழுவில் இருவர் இச்சம்பவம் குறித்த குரல் பதிவை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது அவர்களின் குரலை உறுதி செய்யும் வகையில் குரல் மாதிரிப் பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்து, இதற்கான அனுமதியை வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் பெற்றனர்.
இதன் தொடர்ச்சியாக காவல்துறையில் பணியாற்றும் ஒருவர் உள்பட இருவரையும் சிபி சிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பால்பாண்டி தலைமையிலான போலீஸார் வெள்ளிக்கிழமை சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு தடய அறிவியல் பரிசோதனை மையத்தில் இருவரிடமும் குரல் மாதிரி எடுக்கப்பட்டது. அதன்பிறகு அனைவரும் புதுக்கோட்டைக்குத் திரும்பினர்.
இந்த நிலையில், வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் மரபணு சோதனைக்கு 8 பேர் ரத்தம் தர மறுப்பு தெரிவித்துள்ளனர்.
11 பேர் மரபணு பரிசோதனைக்கு ஆஜராக சிபிசிஐடி காவல் துறையினர் உத்தரவிட்டிருந்த நிலையில் 3 பேர் வந்திருந்தனர்.