களுதாவளை கிராமத்தில் விவசாயி ஒருவரின் முயற்சியினால் நடந்த அதிசயம்
களுதாவளை கிராமத்தில் விவசாயி ஒருவரின் முயற்சியினால் கறிமிளகாய் பயிரிடப்பட்டு அதிக விளைச்சல் கிடைக்கப் பெற்றுள்ளமையை புகைப்படத்தில் காணலாம். உண்மையில் அனைத்து இயற்கை வளங்களையும் கொடையாக பெற்றிட்ட எமது மீன்பாடும் தேன்நாடு இயற்கை அன்னையின் வரப்பிரசாதமாகும் .
எமது சமூகம் விவசாயத்திலும் அதனோடு ஒத்த வணிகத்திலும், ஏனைய வணிகத்திலும், சுயதொழில் முயற்சிகளிலும் தன்னார்வம் காட்ட வேண்டும், அதாவது எமது பிரதான வளமான நில, நீர் வளங்களை பயன்படுத்தி விவசாயத்துறையை நவீன தொழில்நுட்பங்களுடன் முன்னெடுக்கும் போது எங்கள் சமூகமானது பொருளாதாரத்தில் தன்னிறைவடையும். ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் பொருளாதாரத்தின் தேவை இன்றியமையாததாகும்.
அந்த வகையில் புதிய புதிய விவசாய உற்பத்தி முயற்சிகளில் விடுபடுதலானது, பொருளாதார பெருக்கத்தை உருவாக்குவதோடு. அடுத்து வரும் சந்ததிக்கு வழிகாட்டுதலாகவும் அமையும். அந்த வகையில் களுதாவளை கிராமத்தில் விவசாயி ஒருவரின் முயற்சியின் பேறாக கறிமிளகாய் பயிரிட்டு அதிக அறுவடையை பெற்றிருக்கிறார்.
மேலும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படுகின்ற மரக்கறி வகைகளை எமது மாவட்டத்தில் உற்பத்தி செய்வதன் ஊடாக எமது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கூடியதாக இருப்பதுடன், தனிநபர் வருமானங்களை அதிகரித்து எமது சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.
அந்த வகையில் மேற்படி விவசாயிக்கு எமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றோம். எமது கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை பல்வேறு சமூகங்களின் பொருளாதார, சமூக வளர்ச்சியுடன் போட்டி போட்டு எமது சமூகத்தின் இருப்பையும், அதன் வளர்ச்சியையும் பேணவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
அந்த வகையில் தனிநபர் வருமானம் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு முயற்சியாளர்களும் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று. ஒரு மறுமலர்ச்சி உள்ள, தன்னிறைவான சமூகத்தை உருவாக்குவோம்.