வெறும் 4 மாதத்தில் 256 பேர் சாலை விபத்தில் பலி ஆகியுள்ளனர்
தமிழகத்தில் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள், வேலைக்காக, திருப்பூர் நோக்கி இடம் பெயர்ந்து வருகின்றனர்; இதனால், மாவட்ட மக்கள் தொகை உயர்ந்து வருகிறது. தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப, இரு சக்கர, நான்கு சக்கர வாகன போக்கு வரத்து நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சாலை விதிகளை காற்றில்பறக்க விடும் வாகன ஓட்டிகளால், மாவட்டத்தில் சாலை விபத்துக்களும் அதிகரித்துள்ளன.திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 2020ம் ஆண்டில், 2,600 விபத்துக்கள் நடந்துள்ளன; இதில், 774 பேர் உயிரிழந்துள்ளனர்; 2,306 பேர் காயமடைந்துள்ளனர். அதேபோல், 2021ல் நடந்த 2,703 விபத்துக்கள், 795 உயிர்களை காவு வாங்கியுள்ளது; 2,413 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டில், மொத்தம் 3,143 விபத்துக்கள் நடந்துள்ளன; உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 885 ஆக உயர்ந்துள்ளது; 2,961 பேர் காயமடைந்துள்ளனர்.
நடப்பு ஆண்டில், ஜன., - ஏப்., வரையிலான நான்கு மாதங்களில் மட்டும், 1,090 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன; இவற்றில், 256 பேர் பலியாகியுள்ளனர்.1,243 பேர் காயமடைந்துள்ளனர். சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து, விபத்துக்களை கட்டுக்குள் கொண்டுவர போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.