கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற இரண்டு கூலி தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி!
சென்னை,
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற இரண்டு கூலி தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இது தொடர்பாக வீட்டு உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை புழல் காவங்கரை குருசாந்தி நகரை சேர்ந்தவர் நிர்மலா(49). இவருக்கு சொந்தமான இரண்டு அடுக்குமாடி வீட்டில் சிலர் வாடகைக்கு தங்கி உள்ளனர். இன்று காலை அவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டதால் நிர்மலா அதே பகுதியை சேர்ந்த கணேசன்(65) என்பவரிடம் அதனை சரி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதனையடுத்து கணேசன் பாடியநல்லூரை சேர்ந்த பாஸ்கர்(42), இஸ்மாயில்(37) ஆகிய இரு கூலித் தொழிலாளர்களை அழைத்து வந்து அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாஸ்கர், இஸ்மாயில் இருவரும் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கி இருவரும் உள்ளேயே மயங்கி விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர் நிர்மலா உடனே புழல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, போலீஸார் தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்து பாதுகாப்பு உபகரணங்களுடன் தொட்டியில் இறங்கி இருவரது உடலை மீட்டனர். பின்னர் இருவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து வீட்டு உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான பாஸ்கருக்கு வசந்தி என்ற மனைவியும், சேகர் என்ற மகனும் உள்ளனர். அதேபோல் இஸ்மாயிலுக்கு லத்தீபா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர்.