ஊட்டியில் இன்று மலர் கண்காட்சி தொடங்கியது!
ஊட்டி
ஊட்டி கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, 125-வது மலர் கண்காட்சி இன்று(மே 19) துவங்கி, 23ம் தேதி வரை, 5 நாட்கள் நடக்கிறது.
மலர் கண்காட்சியையொட்டி, நடப்பாண்டின் சிறப்பம்சமாக, 80 ஆயிரம் கார்னேஷன் மலர்களை கொண்டு, 45 அடி உயரத்தில் தோகை விரித்தாடும், நமது தேசிய பறவையான மயிலின் பிரம்மாண்டமான உருவம் அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி வனப்பகுதிகளில் காணப்படும், புலி, சிறுத்தை, வரையாடு உள்ளிட்ட விலங்கினங்களின் வடிவமைப்புகள் பல ஆயிரம் மலர்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. தவிர,125வது மலர் கண்காட்சியை நினைவு கூறும் விதமாக, கார்னேஷன் மலர்களால், '125' என்ற வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.
மலர் கண்காட்சிக்கு வரும் சுற்றுலா பயணியர் வசதிக்காக, கூடுதலாக சுற்று பஸ்கள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.
மலர் கண்காட்சியின் ஐந்து நாட்களுக்கு மட்டும், பெரியவர்களுக்கு, 100; சிறியவர்களுக்கு, 50 ரூபாய் என, நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில், 1,500 போலீசார் பல்வேறு இடங்களிலும் ஈடுபட்டுஉள்ளனர். அரசு தாவரவியல் பூங்கா உருவாகி, 175வது ஆண்டு நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. மலர் கண்காட்சியை முன்னிட்டு இன்று (19ம் தேதி) நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
'மலர் கண்காட்சியை காண, உதகை தாவரவியல்பூங்காவிற்கு மறக்காம வாங்க' என, சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த விழாவை, முதல்வர், கவர்னர் உள்ளிட்டோர் துவங்கி வைப்பது வழக்கம். ஆனால், இந்தாண்டு இருவரும் அங்கு செல்லவில்லை. வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், விழாவில் பங்கேற்பார் என, அழைப்பிதழ் அச்சிடப்பட்டு உள்ளது.