காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை மீள் நிர்மாணம் செய்ய முடியாது! ஏன்?

#Sri Lanka #Jaffna #Kangesanthurai
Mayoorikka
4 months ago
காங்கேசன்துறை சிமெந்து  தொழிற்சாலை மீள் நிர்மாணம் செய்ய முடியாது! ஏன்?

தமிழர்தாயகத்தில் காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை ஒரு காலக்கட்டத்தில் வடக்கின் அடையாளமாக காணப்பட்டது.

 காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை 1950 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்த ஒரு சிமெந்து தொழிற்சாலை.

 இந்த தொழிற்சாலையில் சுமார் 1500 இருக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்திருந்தார்கள்.

 வருடத்திற்கு சுமார் 760 000 மெற்றிக்தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இவ்வாறு வெற்றிகரமாக இயக்கிக் கொண்டு வந்த காங்கேசன்துறை துறைமுகம் யுத்தம் காரணமாக தற்பொழுதுவரை மூடப்பட்டுள்ளது. இருந்தும் இதனை திறப்பதற்கு பல பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தும் முடியாமல் போயுள்ளது.

 இந்த தொழிற்சாலை திறக்கப்படாமல் இருப்பதற்கு அரசியல் காரணங்கள் ஒருபுறம் இருந்தாலும் நடைமுறை சிக்கல்கள் இதில் பல இருக்கின்றன.

 குறிப்பாக சூழலியல் பிரச்சனைகள் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. யுத்த காலங்களில் காங்கேசன்துறை மயிலிட்டி தையிட்டி மாவிட்டபுரம் போன்ற பிரதேசங்களில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்த காரணத்தினால் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை அண்டிய பிரதேசங்கள் சூனியப்பிரதேசங்களாகின.

 அன்றிலிருந்து இன்றுவரை இப்பிரதேசத்தை பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி இராணுவம் சீமெந்து தொழிற்சாலையை கையகப்படுத்தியதுடன் தொழிற்சாலையினுள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.

 இந்தநிலையில் குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினரால் தொழிற்சாலையில் இருந்த பெறுமதி மிக்க பொருட்கள் சூறையாடப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. 

இவ்வாறு இருந்தும் குறித்த தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க சில சூழலியல் பிரச்சனைகள் தடையாக உள்ளன.

 அதாவது சுண்ணக்கல் தொழிற்சாலையை அண்ணடிய பிரதேசங்களில் அகழ்ந்து எடுக்கப்படுகிற போது தரைக்கீழ் நீருடன் கடல்நீர் கலப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவும் இது சுற்றுச்சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஏற்கனவே கண்டனம் தெரிவிருந்தனர். 

 தொழிற்சாலை இயங்கு நிலையில் இருந்த காலப்பகுதியில் சுண்ணக்கல் அகழ்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்கள் இன்றும் பாரிய குழிகளாக காட்சி அளிக்கின்ற நிலையில் இவை தொடர்பாகவும் சிந்திக்க வேண்டியுள்ளது. 

எனவே இவற்றினை கருத்தில் கொண்டு குறித்த மூலப்பொருளாகிய சுண்ணக்கல்லினை சாதகமான வேறு பிரதேசங்களில் இருந்து அகழ்ந்தெடுத்து தொழிற்சாலையயை மீள இயக்குவது குறித்த பரிசீலனைகளை மேற்கொள்ள முடியும் என்பது மக்களுடைய கருத்தாக இருக்கிறது.

 இருந்தும் சீமெந்துத் தொழிற்சாலை இயக்கப்படுகின்ற பட்சத்தில் அங்கிருந்து வெளியேற்றப்படுகின்ற கழிவுப்பொருட்களில் மிக முக்கியமாக தூசுக்கள் சுவாசம் சார்ந்த பாதிப்புக்களை அயலில் உள்ள மக்களுக்கு ஏற்படுத்தும் என்கின்ற அச்சமும் எழுப்பப்படுகின்றது. 

 ஓரு பிரதேசத்தின் அபிவிருத்தி நாட்டின் தேசிய அபிவிருத்தியாக அமைந்து விடுகின்றது. 

 இருந்தும் அங்குள்ள நடுத்தர மற்றும் பாரிய கைத்தொழிற்சாலைகளின் பங்களிப்பு என்பது கணிசமானது. 

 ஆனால் அவை மீண்டும் புனர்நிர்மாணம் செய்யப்படும் போது அங்குள்ள இயற்கை வளங்களினதும் மக்களினதும் நிலையானதும் ஆரோக்கியமான வாழ்வியலை கருத்தில் கொள்ளப்பட வேண்டியதும் அவசியமாக இருக்கின்றது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு