யாழ்.மாநகர சபையில் பணியாற்றிய கடைசி சிங்களவர் சிறிமான்ன யாழ் நூலக எரிப்பின் ஒரு சாட்சியமாக கூறிய விளக்கம்

#SriLanka #Jaffna #Lanka4 #memory
Kanimoli
1 year ago
யாழ்.மாநகர சபையில் பணியாற்றிய கடைசி சிங்களவர் சிறிமான்ன யாழ் நூலக எரிப்பின் ஒரு சாட்சியமாக கூறிய விளக்கம்


யாழ்.மாநகர சபையில் பணியாற்றிய கடைசி சிங்களவர் சிறிமான்ன. யாழ் நூலக எரிப்பின் ஒரு சாட்சியமாக விளங்குகிறார். இதுவரை வெளியாகாத சில தகவல்களையும் அவர் நமக்கு ஒப்புவிக்கிறார்.

1981 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தேர்தலின் போது யாழ்ப்பாணத்தில் ஒரு அரச ஊழியராக இருந்த டீ.டபிள்யு சிறிமான்ன தேர்தல் நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட ஊழியர் சிறிமான்ன.

“1981 ஆம் ஆண்டு ஜூன்.நான்காம் திகதி நடந்த அந்த தேர்தலில் பணியாற்ற வேண்டியிருந்தது. குருநாகல் மாவட்ட ஆணையாளரின் பரிந்துரையின்படி தேர்தல் பணிகளில் நான் ஈடுபடுத்துவதற்காக அழைக்கப்பட்டிருந்தேன்.

ஒரு நாள் இரவு என்னுடைய வீட்டுக்கு வந்து தனிப்பட்ட ரீதியில் இந்த அழைப்பை எனக்கு விடுத்தார். அப்போதைய யாழ்ப்பாணத்தின் நிலைமை மோசமாக இருப்பதையிட்டு உரையாடினோம். ஆனால் அவர் ‘நீங்கள் இந்த பணிகளில் ஈடுபட வேண்டும். ஏனென்றால் எங்களுக்கு ஏற்கனவே இங்கே பணியாற்றி கொண்டிருக்கின்ற ஒரு நபர் நீங்கள்’ என்றார்.

ஒரு அரச ஊழியனாக அதனை என்னால் நிராகரிக்க முடியவில்லை. இறுதியில் அடுத்த நாள் அதிகாலையில் குருநாகலில் இருந்து பஸ்ஸில் ஏற்றப்பட்டோம். பின்னர் குருநாகளில் இருந்து இரயிலில் ஒவ்வொரு கம்பார்ட்டுகளுக்குள் நாங்கள் பிரித்து ஏற்றப்பட்டோம்.

குருநாகலில் அன்று இருந்த உதவி அரசாங்க அதிபர் திசாநாயக்க என்பவர் தான் எங்களை அங்கே அழைத்துச் சென்றார்.

இரயில் நிலையத்தில் அங்கே அன்றைய அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா மைக்கை எடுத்து உரத்துப் பேசினார். அவர் எங்களிடம்;

“இப்போது நாங்கள் தேசிய வீரத்தனமான (ජාතික වීර ගමන) பயணத்துக்கு புறப்படுகிறோம். உங்களுக்காண பணிப்புகள் அங்கே கிடைக்கும். உங்களுக்கு தேவையான உதவிகள் அங்கே கிடைக்கும்” என்றார்.

அப்போது இதன் அர்த்தத்தை பூரணமாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த இரயிலில் உள்ள கம்பார்ட்டுகளில் குருநாகல, வாரியபொல என பிரதேசவாரியாக ஒதுக்கப்பட்டிருந்தது.

இரயிலில் சென்றுகொண்டிருக்கும் போது தான் எங்களுடன் அரச ஊழியர்கள் அல்லாதவர்களும் இருந்ததைக் கண்டோம். அவர்கள் கைகளில் பச்சைக் குத்தியவர்கள், லுங்கி அணிந்தவர்கள், விசித்திரமாக உடை அணிந்திருந்தவர்களைக் கண்டோம். அப்போதும் இவர்கள் ஏன், எதற்காக எங்களுடன் வருகிறார்கள் என்பதை உறுதியாக உணர முடியவில்லை.

பின்னர் தான் ஒரளவு ஊகிக்க முடிந்தது.

இரவு எட்டு மணிக்குத் தான் இரயில் யாழ்ப்பாணத்தை அடைந்தது. நாங்கள் இறங்கியதும் இராணுவம் வந்து எங்களை பஸ்களில் ஏற்றிக்கொண்டு சென்றது. எங்களுக்கு அங்கே யாழ் இந்துக் கல்லூரியில் தான் தங்குவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணத்தில் அப்போது ஊரடங்குச் சட்டம் போடப்பட்டிருந்தது. நாங்கள் பஸ்ஸில் போய்க்கொண்டிருந்த போது ஒரு மருங்கிலும் தீயால் சேதப்படுத்தப்பட்டிருந்த பலவற்றைக் கண்டோம். அடுத்த நாள் தேர்தல் ஆனால் முன்னைய நாள் அங்கிருந்த இந்த மோசமான நிலையைக் காணக் கூடியதாக இருந்தது.

அரச ஊழியர்கள் மாத்திரம் தான் உங்களோடு இருந்தார்களா?

யாழ் இந்துக் கல்லூரியில் நாங்கள் சென்றிருந்தபோது அங்கே அமைச்சர் காமினி திசாநாயக்க, காமினி ஜெயவிக்கிரம பெரேரா, பீ.எம்.பிரேமசந்திர ஆகியோர் அங்கே வந்து சேர்ந்தார்கள். எங்களுக்கு ஐம்பது ரூபாய் வீதம் முதலில் வழங்கப்பட்டது.

“உங்களுக்கு அதிகாலை ஐந்து மணிக்கு நியமனக் கடிதங்கள் கிடைக்கும், உங்களுக்கு தேவையான மேலதிக ஊழியர்களும், போலீசார், இராணுவம் என அனைத்தும் கிடைக்கும் நீங்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லுங்கள்.

நீங்கள் வாக்களிப்பை ஏழு மணிக்கு தொடங்குங்கள் ஆனால் பத்து மணிக்கு நிறுத்திவிடவேண்டும். நிறுத்திவிட்டு அங்கே வாக்களிப்புக்காக வரிசையில் இருப்பவர்களை போலிசாரையும், இராணுவத்தையும் கொண்டு கலைத்து விடுங்கள். அதன் பின்னர் உங்கள் பொறுப்பில் இருக்கிற வாக்கட்டைகளை நிரப்பி வாக்குப் பெட்டிகளில் போட்டுவிடுங்கள்.” என்றார்

அப்போது அங்கே இருந்த இன்னொரு ஊழியர் “அப்படியென்றால் யாருக்கு புள்ளடி இடுவது”

என்று வினவினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் “உங்களுக்கு அதில் உள்ள விலங்கு எதுவேண்டு தெரியும் அல்லவா” அதற்கே புல்லடி இடுங்கள் என்றார். ஊழியர்கள் பலர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

எவரும் அங்கே மறுப்பு தெரிவிக்கும் நிலையில் இருக்கவில்லை. அங்கிருந்த பலருக்கு நிலைமை பற்றிய விசனம் இருந்தபோதும் எதிர்த்து இயங்கும் தைரியம் எவருக்கும் இருக்கவில்லை.

இது மோசமான தேர்தல் மோசடி அல்லவா?

உண்மைதான் மோசமான தேர்தல் மோசடி தான். இத்தனைக்கும் அப்போது அரசாங்கத்துக்கு ஆறில் ஐந்து பெரும்பான்மை பலம் இருந்தபோதும் யாழ்ப்பாணத்தில் மோசமான தேர்தளை நடத்தினார்கள்.

என்னோடு அங்கே சோமபால ஜெயவீர என்கிற அஒரு ஊழியர் இருந்தார். நாங்கள் இருவரும் ஒன்றாகத் தான் அங்கே தங்கியிருந்தோம். அவர் ஒரு உதவி ஆணையாளர். அவரிடம் நான்; யாழ்ப்பாணத்தில் நான் 79ஆம் ஆண்டிலிருந்து கடமையாற்றி வருகிறேன். அந்த மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க நான் துணைபோக முடியாது; எனவே இங்கிருந்து நான் தப்பிப் போகப் போகிறேன் என்றேன். அவரையும் அழைத்தேன். ஆனால் அவர்; பயமாக இருக்கிறது கைது செய்துவிடுவார்கள் என்று பயப்பட்டார்.

நாம் இருவர் மட்டும் தான் எனவே பெரிதாக பாதிக்காது இருவரும் சென்று விடலாம் என்று அவரை சமாதானப் படுத்த முயன்றேன். இறுதியில் அவரும் ஒப்புகொண்டார்.

அதிகாலை ஐந்து மணிக்கு எல்லோருக்கும் நியமனக் கடிதங்களைக் கொண்டு வந்து பெயர் கூறி அழைத்தார்கள். நாங்கள் இருவரும் அதனை எடுக்கவில்லை. தெரியாதது போல இருந்தோம். அதிகாலை பலர் தயாராகி இருக்காததால் அங்கே பலர் நியமனக் கடிதங்களை உடனடியாக எடுக்க வந்திருக்கவில்லை. எனவே பல கடிதங்கள் அங்கே தேங்கி இருந்தன.

அங்கே காமினி திசாநாயக்க கூறினார். நியமனக் கடிதங்கள் பெற்றவர்கள் ஒரு வரிசைக்கு வாருங்கள் கிடைக்காதாவர்கள் மறு வரிசைக்கு வாருங்கள் என்றார்.

உங்கள் பெயர் ஆரியசேன என்று இருக்கலாம். அங்கே நீங்கள் கருணாசேன என்று கூறி வாக்குப் பெட்டிகளை எடுங்கள். இப்படித்தான் ஆரியசேனக்கள், கருணாசேனக்கள் ஆகினார்கள். கருணாதிலக்கக்கள் குணதிலக்கக்கள் ஆகினார்கள். இப்படித்தான் அவர்கள் தயார்படுத்தப்பட்டார்கள். பலருக்கு இதனை மறுப்பதற்கோ, எதிர்பதற்கோ திராணி இருக்கவில்லை.

ஆனால் என் மனசாட்சி இந்த நிலைமையை எற்றுக்கொள்ள மறுத்தது.

பின்னர் இராணுவம் வந்து வாயிற் கதவைத் திறந்து நியமனம் பெற்ற ஊழியர்களை வெளியே அனுப்பியது. SPO தலைமையில் இன்னொரு அணியோடு சேர்ந்து நாங்கள் இருவரும் அந்த அணியோடு இணைந்துகொண்டோம்.

SPO வுக்கு தனது குழுவில் இருந்தவர்கள் யார் யார் என்பது சரியாக தெரிந்திருக்கவில்லை. பஸ்களில் ஏற்றிக்கொண்டு சென்றார்கள். நாங்கள் நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டோம். அங்கு சென்ற போது தாமதமாகியிருந்தது. அங்கே இருந்த குழப்பகரமான சூழலைப் பயன்படுத்தி நாங்கள் இருவரும் அங்கிருந்து இரகசியமாக தப்பிதத்தோம்.

எங்களுக்கு எங்கே செல்வது என்று தெரியவில்லை. யாழ்ப்பாணத்துக்கு சென்று அங்கே உள்ள நூல் நிலையத்துக்கு செல்வோம் என்று நான் கூறினேன். நான் அங்கே பணிபுரிந்த காலத்தில் நூலகத்துக்கு சென்று பத்திரிகைகளை வாசித்துவிட்டுப் போகும் வழக்கம் எனக்கு இருந்தது. அங்கே அப்போது சிங்களப் பத்திரிகைகள் எல்லாம் இருந்தன.

நாங்கள் நூலகத்தை அண்மித்துக் கொண்டிருந்தபோது அந்தத் திசையில் புகையைக் கண்டோம்.

நூலகம் எரிக்கப்பட்டுவிட்டதை அங்கு சென்று பார்த்தபோது கண்களில் நீர் நிறைந்திருந்தது. அங்கே அப்போதும் சிலர் அதனைப் பார்த்தபடி நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தனர்.

அதுவரை அங்கிருந்த புலிகள் போன்ற இயக்கங்களுக்கு மக்கள் ஆதரவு அவ்வளவு இருக்கவில்லை. ஆனால் இந்த சம்பவம் அந்த இயக்கங்களுக்கான ஆதரவை அதிகரித்தது. ஒரு உதாரணம் சொல்கிறேன். அப்போது நாங்கள் மதிய உணவை சேர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது சில தமிழர்களிடம் நான் கேட்டிருக்கிறேன் “உண்மையில் உங்களுக்கு ஈழம் வேண்டுமா?” என்று. அதற்கு அவர்கள் என்னைப் பார்த்து சிரித்து இருக்கிறார்கள். அங்கே படித்துவிட்டு கொழும்பில் வேலை பார்க்கும் கனவுகளில் இருந்தவர்கள் அவர்கள். அவர்களுக்கு ஈழம் தேவைப்பட்டிருக்கவில்லை.

ஆனால் இந்த சம்பவமும் அதன் பின்னர் 83 கலவரங்களும் சர்வதேச ரீதியில் புலிகள் போன்ற இயக்கங்களின் இருப்புக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தின. அதற்கு முன்னர் இருந்த சிங்கள தமிழர் உறவு மோசமடைந்தன.

நாங்கள்மீண்டும் அங்கிருந்து ஐந்தாம் திகதி இரயில் புறப்பட்டோம். அந்த இரயில் அனைத்து இரயில் நிலையங்களிலும் நிறுத்தப்பட்டது. ஒவ்வொரு நிறுத்தத்திலும் எங்களோடு பயணித்த சிங்காவர்கள் இரயிலில் இருந்து இறங்கி அங்கிருந்த மரங்களில் பலாத்காரமாக மாம்பழங்களைப் பறித்து சேகரித்தார்கள். வெறும் சிலர் அங்கிருந்த கடைகளில் சிகரட்டுகளையும், இனிப்புப் பண்ட போத்தல்களையும், வேறு பொருட்களையும் பணம் செலுத்தாமல் பலாத்காரமாக எடுத்துக்கொண்டு வந்தார்கள். இப்படியான நிலைமைகளை தமிழ் மக்கள் பீதியுடன் எதிர்கொண்டார்கள்.

வவுனியாவில் இரயில் தரித்து நின்றபோது இரயிலில் இருந்து ஒரு கும்பல் இறங்கிச் சென்று அங்கிருந்த ஒரு கடையை கொள்ளையடித்து அங்கிருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு வந்து ஆசனங்களுக்குக் கீழே மறைத்து வைத்தனர், அங்கே கடையில் இருந்து ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு ஓடி வந்த ஒருவர் “சிங்களத்தில்” அந்தக் கடை எனது கடை அங்கு இருந்த பொருட்கள் அனைத்தையும் திருப்பித் தராவிட்டால் உங்களைக் கொன்றுவிடுவேன். நானும் ஒரு சிங்களவன் தான் என்றார்.

சிலர் திருப்பிக் கொண்டுத்தார்கள், சிலவற்றை அந்தக் கடைக்காரரே எடுத்துச் சென்றார். இந்தக் கும்பலோடு நாங்கள் வாக்குவாதப் பட்டோம். அது மோதல் நிலையை உருவாக்கியிருந்தது.

மீண்டும் அந்த நூலகம் சந்திரிகா பண்டாரநாயக்கவின் காலத்தில் திறக்கப்பட்டது. அந்த நூலகத்தின் மதிப்பைக் கூறுவதாயின்; இன்றும் அந்த நூலகத்துக்குள் பாதணிகளோடு உள்ளே செல்ல முடியாது, நீங்கள் வெளியில் அவற்றை கழற்றி வைத்து விட்டுத் தான் செல்லலாம்.

பிற்காலத்தில் இவற்றை விசாரிப்பதற்காக LLRC குழு பின்னர் நியமிக்கப்பட்டது. என்னை அவர்கள் சாட்சியமளிக்கும்படி வீட்டுக்கே தொலைபேசி மூலம் அழைத்தார்கள். அக்குழுவின் முன் நான் இரு தடவைகள் சாட்சியமளித்தேன். அத்துகொட என்பவர் தான் அக்குழுவின் செயலாளராக இருந்தார். நான் நடந்த அனைத்தையும் வெளிப்படுத்தினேன். பின்னர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் யாழ் நூலக எரிப்புக்கு மன்னிப்பு கோரினார். காலம் பிந்தி என்றாலும் அதை செய்தது நல்ல விடயம்.

ஆனால் இன்றும் அம்மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இங்கிருந்து அங்கே செல்வதற்கு அழகான பாதைகளை அமைத்தால் மட்டும் போதாது. அம்மக்களின் உளக்குமுறல்களை தீர்க்கும்வகையில் தீர்வுகளை வழங்குவதே அரசு செய்யவேண்டிய கடமை. ஆனால் அது வாய்க்குமா? முற்போக்கானவர்கள் இந்த விடயத்தில் தொடர் அழுத்தம் கொடுத்து இதனை உரிய வகையில் தீர்க்காவிட்டால் இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கும் இந்த பிரச்சினைகளின் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.