திருமணப்பொருத்தத்தில் ஜாதகத்திலுள்ள சந்திரனின் முக்கியத்துவம்

#Astrology #Moon #Lanka4 #வீடு #Marriage #ஜோதிடம் #லங்கா4
திருமணப்பொருத்தத்தில் ஜாதகத்திலுள்ள சந்திரனின் முக்கியத்துவம்

திருமணத்தின் போது ஜாதகத்தில் கவத்தில் கொள்ள வேண்டிய கிரகங்களில் முக்கியமானதாகச் சந்திரனைப் பற்றி சிலர் அக்கறைகொள்வதில்லை. 

5, 9 ஆகிய வீடுகளில் சந்திரன் அமையப் பெற்றால் தயாள குணமும் வள்ளல் தன்மையும் மிக்கவராக இருப்பார்.

 லக்கினத்திலிருந்து ஏழாம் வீட்டை ஆராய்ந்து திருமணத்தைப் பற்றிய செய்திகளை அறிந்து கொள்வதைப் போல ஜனனகால ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசியை முதலாகக் கொண்டு (சந்திரா லக்கினம்) அங்கிருந்து குடும்ப வாழ்க்கை (திருமண வாழ்க்கை) எவ்வாறு அமையும் என்பதையும் துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம். 

பத்துப் பொருத்தங்கள் பார்ப்பது எவ்வளவு முக்கியமோ அதைப் போலவே சந்திரனில் இருந்து மற்ற கிரகங்கள் நின்ற தன்மையை ஆராய்வதும் மிக முக்கியமானது.

 சூரியன் ஆத்ம காரகன் என்பதால் சூரியன் நின்ற ராசியை மையமாக வைத்து ராசிபலன் கூறும் முறையும் உள்ளது. ஆனால் பொதுவாக நாம் சந்திரன் நின்ற ராசியைக் கொண்டு தான் ராசி பலன்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

 அப்படிப் பார்க்கும் போது சந்திராஷ்டம தினங்களில் புதிய காரியங்களை, முக்கியமாகச் சுப காரியங்களைத் துவங்கக்கூடாது என்று எல்லா ஜோதிடர்களும் கூறுகின்றனர் என்றால் சந்திரனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளது என்பது நமக்கு புரிகின்றது.

 சூரியன் ஆன்மா என்றால், லக்கினம் உயிர், சந்திரன் நின்ற ராசி உடல் மற்றும் மனம். இதைப் போலவே ரத்தத்தைக் குறிப்பது செவ்வாய், நரம்புகளைக் குறிப்பது புதன், வீரியத்தைக் குறிப்பது சுக்கிரன் என்று உடல் பாகங்களைக் கிரகங்கள் குறிக்கின்றன.

 குடும்ப வாழ்க்கைக்கு, முக்கியமாக திருமண வாழ்க்கைக்கு ஆன்மா என்கின்ற சூரியனின் பலம், உடல் மற்றும் மனம் என்கின்ற சந்திரனின் பலத்தோடு, உயிர் என்கின்ற லக்கினத்தின் பலமும், ரத்தத்தைக் குறிக்கின்ற செவ்வாயின் பலமும், வீரியத்தைக் குறிக்கின்ற சுக்கிரனின் பலமும் ஆராய வேண்டும் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 எனவே தான் சில நூல்களில் செவ்வாய் தோஷம் பார்க்கும் போது, லக்கினத்தில் இருந்து செவ்வாய் நின்ற வீடுகளை பார்ப்பதைப் போல சந்திரனில் இருந்து செவ்வாய் நின்ற வீடுகளை பார்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளன.