தற்கொலைகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகள்!
நாம் பல சாதனைகள் நிகழ்த்துகிறோம். எம்மவரின் பெயர்கள் பல இடங்களில் சாதனைக்குரியவைகளாக நிலை நாட்டப்பட்டிருக்கின்றது.
ஆனால் இன்றைய செய்தி தாள்களையும் சமூக வலைத்தளங்களையும் நிரப்பிக் கொண்டிருக்கும் செய்திகள் தன் உயிர் மாய்ப்புக்கள் பற்றி இருப்பது உண்மையில் மன வேதனையானது தானே? எத்தனையோ வேதனைகள், கஷ்டங்கள் இருந்த போதிலும் மன ரீதியில் உறுதியானவர்கள் நம் முன்னோர்கள் என்பதை நாம் அறிவோம். ஏன்? எவ்வளவோ மனத்தாக்கங்கள், குழப்பங்கள் வந்த போதிலும் எம் பெற்றோர்கள் அதை தாங்கி நம்மை வளர்க்கவில்லையா?
இன்றைக்கு உண்மையில் இவற்றை காரணங்களாக சொல்லி அப்படியான முயற்சியில் இறங்குபவரை தனியே குற்றவாளி கூண்டில் நிறுத்த முடியாது தான். காரணம் போட்டித்தன்மை மிக்க உலகத்தில் மகிழ்வாய் அனுபவித்து வாழ தவறிய வாழ்வில் ஒப்பிடுகளும் உயர்வான இலக்குகளும் அதை விட சமூகத்தின் அறியாமையில் உருவாகிய எதிர்பார்புக்களும் ஒரு தனி மனிதனின் பலம் பலவீனங்களை உணர தவறி விட்டன என்பது மன வேதனைக்குரிய உண்மை.
எம் தொடர்பால்களில் ஏற்பட்ட பாரிய வெற்றிடம் ,அதை நிரப்ப நாம் உருவாக்கிய கண்டுபிடிப்புக்கள் ,தற்கணிப்பிற்கான சந்தர்ப்பங்களை இழந்து விட்டு வெறுமன புத்தகக்கல்வியிலேயே வாழ்வை தொலைத்து விட்டமை, நிறைகாண் மனப்பாங்கும் தாங்குதல் நிலைப்பாட்டையும் விதைத்து விட தவறிய இன்றைய கல்வி சூழல், வாழ்வின் சந்தர்ப்பங்களிற்கான நெகிழ்ச்சித்தன்மையை விடுத்து இறுக்கமான மனப்பாங்கை விதைக்கும் குடும்ப சூழல்கள் அதிலும் தன் பிள்ளை கஷ்டமே தெரியாமல் வளரட்டும் என்ற பெற்றோரின் நிலையான மனப்பாங்கு .
மன அழுத்தமான நிலைகளை கையாள அவற்றின் தாக்கத்தை குறைக்கவே நேரம் இல்லாத கல்வி முறை. அருகில் இருப்பவனின் மனதையே அறிய முடியாத இன்றைய நட்புக்கள். அனுதாபமும் கருணையும் குறைந்த மனித தொடர்பாடல்கள்.
பட்டப்படிப்புகளிற்கு குறைவில்லை ஆனால் வேலை வாய்ப்பிற்கு வழியில்லாத இந்த நாட்டின் நிலைமை. இதில் யாரில் நோக போகிறோம்? யாரை குறை சொல்லப்போகிறோம்.
ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். திறமைகளாலும் மனப்பாங்கினாலும் வேறுபட்டவன். சமூக விலங்கு என்பதனால் மட்டும் சமூகத்தின் அத்தனை கோட்பாடும் மனப்பாங்கும் ஒருவனில் திணிக்கப்பட எந்த நியாயமும் இல்லை.
மனிதனை நிறை குறைகளோடு ஏற்றுக்கொண்டு அவன் பலங்களிற்கு ஊக்கம் கொடுப்போம்.பலவீனங்களை பலங்களால் மறைப்போம்.
மனத்தாக்கம் யாருக்கும் பொதுவானதே ! நம்மவரோடு அருகாமையில் உணர்வுகளை புரிவோம் அதை தெரிந்து ஆதரவு கொடுப்போம்