இலங்கையில் 48 மணி நேரத்திற்குள் சிறுவர்கள் உட்பட பலர் மாயம் - சஜித் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
நாட்டில் கடந்த 48 மணிநேரத்தில் 11 பேர் காணாமற் போயுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த 48 மணிநேரத்தில் மணிநேரத்தில், மாத்திரம் 11 பேர் காணாமற்போயுள்ளனர். அவர்களில் 5 பேர் சிறுவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
யு.என்.டி.பி அறிக்கையில், நாட்டில் 10 பேரில் 6 பேர், ஆபத்தான நிலையில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 220 இலட்சம் மக்களில் 123 இலட்சம் மக்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் எனவும், ஆனால் அரசாங்கம் நாட்டில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்பதுபோல தான் செயற்பட்டு வருகின்றது எனவும் விசனம் வெளியிட்டுள்ளார்.
நாட்டில் மின்சாரக்கட்டணம், எரிபொருள் கட்டணம், எரிவாயு கட்டணம் என அனைத்தையும் அரசாங்கம் தற்போது உயர்த்தியுள்ளது எனதம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், எப்படி எங்களை ஒன்றாக இணைந்து செயற்படுமாறு நீங்கள் அழைக்க முடியும்? மனசாட்சியுடன் தானா நீங்கள் செயற்படுகின்றீர்கள் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
அதுமட்டுமல்லாது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜேர்மன் தொலைக்காட்சியான DWவிற்கு அண்மையில் வழங்கிய நேர்க்காணலில், சர்வதேச விசாரணையொன்று தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.
எனினும், ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் சர்வதேச விசாரணையொன்றுக்கு செல்வோம் என அவர் தான் அன்று கூறியிருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவர் பதவியில் இல்லாத போது சர்வதேச விசாரணை அவசியம் எனக் கூறிவிட்டு, தற்போது ஜனாதிபதியான பின்னர் எப்படி அதனை வேண்டாம் எனக் கூறமுடியும் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாட்டிலுள்ள பெரும்பாலோனோருக்கு உள்ளக பொறிமுறையின் கீழ் நம்பிக்கையில்லை எனவும் தமக்கும் நம்பிக்கையில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனால்தான் சர்வதேச விசாரணைக்கு செல்ல வேண்டும் என தாமும் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக புதிய விசாரணையொன்று அவசியம். இதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பும் அவசியம் எனத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது வைத்தியர் விராஜ் பெரேரா, போதைப்பொருள் கேந்திர நிலையமாக இந்நாடு மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சொம்பி எனும் புதிய போதைப் பொருள் ஒன்று வந்துள்ளதாகவும், அதனை பயன்படுத்தினால் சொம்பிகளைப் போல செயற்படவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இது சாதாரண விடயமல்ல மிக அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.