சமூகத்தில் பெண்கள் உளவியல் ரீதியாக எதிர்கொள்ளும் சவால்கள்!

#SriLanka #Article #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
11 months ago
சமூகத்தில் பெண்கள் உளவியல் ரீதியாக எதிர்கொள்ளும் சவால்கள்!

இந்த இருபத்தோராவது நூற்றாண்டில் விண்வெளியில் வீடு கட்ட செப்பனிட்டுக் கொண்டிருக்கும் அதிகளவான பெண்கள் இல்லாமல் இல்லை. தன் குடும்பம் அல்லது சமூகம் சார்ந்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தகர்த்திடாமல் தன்னைச்சுற்றி வட்டமிட்டு, வட்டத்தினுள் கோடு கீறி வாழ்க்கை நடத்தும் பெண்கள் பெரும்பாலும் பொது வெளிகளிலோ சமூக வலைத்தளங்களிலோ தன் முகம் மறைத்து கண்ணாடிக்கு பின் தமது அலங்காரங்களை ரசிப்பவர்களாகவே இருக்கின்றார்கள். இதனால் அவர்கள் நாகரீகம் தெரியாதவர்கள், நாட்டு நடப்பு அறியாதவர்கள், உலகத்தோடு ஒன்றி வாழ பழகாதவர்கள், படிப்பறிவற்றவர்கள் பண்பாடு கலாச்சார புரிதலற்றவர்கள் நவீன உலகத்தை விரும்பாதவர்கள் என தாமாகவே தப்பு கணக்கு போடுவது நமது அறியாமை. அவர்கள் அவர்களாகவும் அடுத்தவரின் விமர்சனங்கள் மற்றும் இடையூறுகளுக்கு அப்பாற்பட்டவர்களாகவே வாழும் நல்லொழுக்கம் கற்றுத் தெளிந்த நல்ல மங்கை என்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

images/content-image/1702207773.jpg

இன்றைய நாகரிகப் பெண்கள் உலகளாவிய ரீதியில் அனைத்து பதவிகள் மற்றும் ஏனைய துறைகளிலும் ஆணுக்கு நிகராக அங்கம் வகிக்கின்றார்கள் என்றால் உளவியல் ரீதியில் ஆரோக்கியமான விடயமாகும். உண்மையில் இவ்வுலகம் பெண்களுக்கு விடுதலை சுதந்திரம் அளிக்கின்றது.

அவர்களுக்கும் சமூகத்தில் சம உரிமை கொடுத்து அழகு பார்க்கப்படுகின்றது. உளவியல் ரீதியில் அவர்களின் திறமைகளும் இன்றளவும் மெச்சப்படுகின்றது. அவர்களின் கருத்துக்களை வரவேற்கின்றது. அவர்களின் முடிவுகளை இன்றைய உளவியல் ஏற்றுக்கொள்கின்றது. மொத்தத்தில் பெண்களையும் மதிக்கின்றது. கெளரவிக்கின்றது. பெண்களும் ஆளுமையை வெளிப்படுத்தி சுதந்திரமாக வாழ இடம் அளிக்கின்றது. என்று தானே அர்த்தம்? ஆனால் திறமைகள் இருந்தும் வசதியின்மை, சுதந்திரமின்மை பணப்பிரச்சினை போன்ற காரணங்களினால் இத்தகைய வாய்ப்புக்கள் கெளரவங்கள் கிடைக்காமல் மூலையில் முடங்கி விடுகின்றனர். இதுவும் உளவியல் ரீதியில் பெண்கள் எதிர்கொள்ளும் சவாலாகக் கூறமுடியும். பல பெண்கள் அந்த பெண்களை விட திறமை குறைவாக இருந்தும் தமக்கு அளிக்கப்படும் சுதந்திரத்தால் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் பெண்கள் தேர்ந்தெடுக்கும் பாதைகள் சரியானது தானா என பார்த்தால் அவை ஐம்பது வீதம் சமூகத்திற்கு முன்னுதாரணமாக அமைவதற்கு பதிலாக, சில நிகழ்வுகள் அல்லது அந்தப் பெண்கள் நடந்துகொள்ளும் விதங்கள் எம்மை முகம் சுழிக்கத்தான் வைக்கின்றன. 

images/content-image/1702207790.jpg

குறிப்பாக இன்றைய கால கட்டத்தில் பல பெண்கள் பல்வேறு உளவியல் ரீதியாக ஆடை, சுதந்திரம், பேச்சு பற்றி பேசுவோமானால் இன்றும் சரி பலநூறு வருடங்களுக்கு முன்னரும் சரி சமூகத்தில் ஒரு பெண்ணை ஒழுக்கத்தின் அடிப்படையில் கணிப்பதற்காக கவனிக்கப்படும் முதல் விடயம் அவர்களது ஆடை தான். அவ்வாறிருக்க இன்றய பெண்கள் தனியறையில் இருப்பது போன்ற உணர்வில் பொது வெளிகளில் தங்கள் ஆடை சுதந்திரத்தில் தடையின்றி தாராளமாக்கிக் கொள்கின்றார்கள். வைத்தியசாலை போன்ற மக்கள் நடமாட்டம் அதிகமான, பேச்சு, சுதந்திரம், பொது வெளிகள் மேடைகள், கட்டடங்கள் போன்றவற்றில் தைரியமாகப் பேசும் பெண்களை வாழ்த்த வேண்டும். ஏனெனில் பெண்கள் கூச்ச சுபாவம் உடையவர்கள் என்கின்ற பார்வை சமூகத்தில் உண்டு. இருவர், மூவர் இருக்கும் இடங்களில் கூட பேச சங்கடப்படுக் கொண்டிருக்கின்றார்கள்.

தைரியமாக ஓரிடத்தில் நின்று பேசுவது என்பது நல்ல மாற்றம் தான். ஆனால் பேசத்தெரியும் என்பதற்காக அருவருக்கத் தக்க விடயங்களையும், ஆபாசமான பேச்சுக்களையும் பேசுவது உண்மையில் வேதனைதான். இதனால் அவர்கள் சமூகத்திற்கு எந்தக் கருத்தினையும் சொல்லவரவில்லை. மாறாக "பெண்ணா இவள்" எனும் அவப்பெயரையே சம்பாதித்துக்கொள்கின்றார்கள். இவ்வாறான ஒரு சிலரின் தவறான நடத்தைகள், பேச்சுக்கள் ஒட்டு மொத்த பெண் சமூகத்துக்கும் ஏனையவர்களுக்கும் அவதூறு ஏற்படுத்துவது தான் வேதனையான விடயமாகும் . இவர்களால் சாதிக்கத் துடிக்கும் ஏனைய பெண்களும் சேர்ந்தே முடக்கப்படுகின்றார்கள். அவர்களின் சுதந்திரமும் பறிக்கப்படுகின்றது.

images/content-image/1702207810.jpg

நாட்டில் கொவிட் தொற்று காலப்பகுதியில் பிரதான கொள்கையாக தொடர்ச்சியான சமூக முடக்கலும் தனிமைப்படுத்தல் விதிகளும் காணப்படுகின்ற நிலையில் அதற்கு எதிரான கண்டனங்களையும் நாம் காணக்கூடியதாகவுள்ளது. இதுவும் இன்றய சமூக ரீதியில் உளவியல் ரீதியாக நோக்க முடியும். காரணம் இக்காலப்பகுதியில் பெண்களுக்கு ஏதிரான வீட்டுப் பகுதியில் பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகளுடன் கூடிய பாலியல் அடிப்படையிலான வன்முறைகள் அதிகமாகவே காணப்படுகின்றன. இக்காலகட்டத்தை உளவியல் பாங்குடன் நோக்குமிடத்து குறிப்பாக பெண்கள் தமது சுய மற்றும் தொழில் ரீதியாக முகம் கொடுத்து வரும் ஒரு சவாலான விடயமாக வீட்டு வன்முறையை அடையாளப்படுத்திக் கூறலாம்.

எனவே சாதாரண நாட்களிலும் பார்க்க இக்காலப்பகுதியில் மிகப்பெரிய அளவிலான பாதுகாப்பு பெண்களுக்கு தேவைப்படுகின்றது. இது பெண்களை மேலும் ஊக்கமளிக்க உந்து சக்தியாக அமையும். இதற்கு ஆதாரமாக சில நாட்களில் வீட்டு வன்முறைகளை முன்படுத்தி அதற்கெதிரான உதவி மற்றும் ஆலோசனைகளை மேற்கொள்வது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வது தொடர்பான அழைப்புகளின் எண்ணிக்கை பத்து வீதம் தொடக்கம் ஐம்பது வீதம் ஆக அதிகரித்துள்ளது.இன்றைய சமூகத்தில் பெண்கள் பல்வேறான சவால்களுக்கு மத்தியிலும் தடையாக கருதாது சாதனைபடைக்க வேண்டுமென்ற தீராத வெற்றியினால் நாளுக்கு நாள் பெண்களின் ஆளுமைப் பண்பு விருத்தி அடைந்துள்ளது.

images/content-image/1702207849.jpg

பொதுவாக குடும்ப வன்முறையானது இன்றைய சமூகத்தில் பாதிக்கப்பட்டவரும், சம்பந்தப்பட்டவருக்கும் இடையே தனிப்பட்ட இயற்கையான தொடர்பு காரணமாக எழும் பிரச்சினைகளால் உடல் ரீதியான அல்லது உளரீதியான சவால்களுக்கு முகங்கொடுக்கும் நிலை ஏற்படுகின்றது.  பெண்களுக்கு எதிராக நடைபெறும் அவதூறான நிலை மாற்றப்பட்டு நமது சமூகத்தின் தூண்களென புதுமைப் பெண்களை கருத வேண்டு மென்பது இத் தலைப்பிற்குப் பொருத்தப்பாடு உடைய கருத்தாகுமெண்றால் எவ்வித ஐயப்பாடுமில்லை.

இக்கால சமூகத்திலே ஏற்பட்ட வேலையிழப்பு வீட்டிலிருந்தவாறே தொழில் புரிதல் மற்றும் பாடசாலைகளின் பூட்டு காரணமாக பெண்களும் குழந்தைகளுக்கும் வீட்டிலே தொடர்ச்சியாக தங்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் குறித்த வன்முறை புரிபவர்களிம் அதிக நேரத்தை செல்விட வேண்டியிருக்கின்றமை போன்ற உளவியல் ரீதியான சவால்களின் மத்தியில் நமது பெண்களின் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால் சட்டங்கள் எவ்வாறு இருப்பினும் கொவிட் காலப்பகுதியின் போது சமூக கட்டுப்பாடு விதிக்கப்பட்டமையால் நீதிமன்றங்கள் உட்பட நிறுவனங்களின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப் பட்டிருப்பின், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக நேரடியாக சென்று பொலிசாரிடம் முறையிடவோ அல்லது சட்ட உதவியை நாடுவதற்கோ அல்லது சமூகத்துடன் ஒன்றித்து முடிவெடுக்கவோ அடிநாதமற்றவர்களாகப் பெண்கள் காணப்படுகின்றார்கள்.

images/content-image/1702208065.jpg

அது மட்டும் இன்றி பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பினையும் உறுதி செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. காரணம் இன்றைய சமூகத்திலே பெண்களென்றால் போகப் பொருளாகக் கருதும் நபர்களே அதிகளவில் காணப்படுகின்றார்கள். இந்நிலை மாற்றம் பெற்று சமத்துவ நோக்குடன் செயற்பட வேண்டியது அனைவரது கடமையாகும்.  உளவியல் என்பது அனைவருக்கும் பொருந்தக்கூடியது. இந்நிலை ஆளுமைத் தன்மையென்றே நம்பப்படுகின்றது. இன்றைய கொவிட் தாக்கத்திற்கு உள்ளான உலகில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து வருகிறார்கள். ஆனால் உளவியல் என்பது பல்வேறு சந்தர்ப்பங்களாலும் நபர்களாலும் உருவாக்கப்படுகின்றது என்பதை அறிவதில்லை.

பெண்களின் ஆளுமையானது பல்வேறு ரீதியில் நோக்கப்படுகின்றது. அவற்றில் அவர்கள் சமூகத்தின் மீது கொண்டுள்ள அதீத ஈடுபாடென்றால் உண்மையாகும். எனவே சமத்துவம் வேண்டி நிற்கும் பெண்களாகிய நாம் நமக்காக வரையப்பட்ட விதிக்குள் வாழ்ந்து நமது சந்ததிகளையும் சிறப்பான ஓர் எதிர்காலத்திற்கு வழிநடத்துவதே எமது கடமை ஆகும்.

images/content-image/1702208088.jpg

உளவியல் ரீதியாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற குணாதிசயங்கள் பெண்களுக்கு மட்டுமே உரித்தானது. அதை ஆண்களுக்கு ஒப்பிட முடியாது. அதே போல் கருப்பை எனும் உயிர் வளர்க்கு புனிதமான இடம் பெண்களிடம் உண்டு.இப்படிப்பட்ட சிந்தனை, நோக்கம் கொண்ட சமூகம் உருவாக்கும் பிரச்சினைகள் அவளின் சுயசிந்தனை, சுதந்திரத்தை அவளுடைய ஆளுமையை இழக்கவும் செய்கின்றன. இதுவும் பெண்கள் எதிர் கொள்ளும் உளவியல் ரீதியான சவாலாகக் காணப்படுகின்றது.

செல்வம் படைத்த பெண்களை விட ஏழ்மையிலும் வாழும் வாழ்வாதாரத்தை தேடிச் செல்லும் பெண்கள் பாலியல் ரீதியான பிரச்சினைக்குத் தள்ளப்படுவது மிக அதிகமாகும். உதாரணமாக ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்கள் அலுவலகங்கள் மற்றும் மலையகத் தோட்டங்களில் பணிபுரியும் பெண்கள் இப்படியான நிலைக்கும் தோட்டங்களில் பணிபுரியும் பெண்கள் பிரச்சினைக்கும் தள்ளப்படுகின்றார்கள். இப்பிரச்சினையினை வெளியில் சொல்ல முடியாமலும் சமூகம், கலாசாரம், பண்பாடு என்பவற்றுக்கு பயந்து தயங்கி நின்று தங்களுக்குள்ளே மூடி மறைத்து காலப் பகுதியில் உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் போது தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு வந்து விடுகின்றனர். 

images/content-image/1702208115.jpg

சில ஆளுமை மிக்க பெண்கள் தங்கள் எதிர்காலத்தையும் பொருட்படுத்தாது பல்வேறு பிரச்சினைகளுக்கும் சட்ட ரீதியான தீர்வுகளை தேடிச் செல்ல முயல்கையிலும் அதே மாதிரி பிரச்சினைகள் வேறு நபர்களினால் வரவும் செய்கின்றன. இதனால் குற்றவாளிகள் தப்பிக்கும் சூழலே அதிகம் இடம் பெறுகின்றது. தனித்து வாழும் பெண்கள் ஆண்களின் பார்வையில் எப்போதும் எதிர்மறையாகவே நோக்கப்படுகின்றார்கள். ஆண்களே! உங்கள் தாய், மனைவி சகோதரிகளுக்கும் அவதூற இடையூறுகளை ஏற்படுத்தாது அவர்களும் பெண்கள் என்பதை கருத்தில் கொண்டு பெண்களை பெண்களாக நினைக்காவிட்டாலும் உங்களைப் போன்ற உணர்வுள்ள சாதாரண மனிதர்கள் என்றேனும் மதியுங்கள். 

தனிமையில் வாழும் பெண்ணின் மீது அவதூறான கண்ணோட்டத்தை விட்டு அவள் வாழ்வதற்கான பாதுகாப்பு சூழலை என்றும் எமது சமூகம் பெண்களின் உரிமையும், சுதந்திரமும் மேல் ஓங்கும் என்பதில் ஐயமில்லை. .அடுத்து பெண்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான சவாலாக பெண்களுக்கு எதிரான இணைய வன்முறைகள் காணப்படுகின்றன. கடந்த ஆண்டு உலகெங்கும் கொவிட் நோய்த் தொற்று தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் மக்களை பாதுகாக்கவும் நோய்ப்பரவலை கட்டுப்படுத்தவும் மக்கள் தங்கள் வீடுகளில் தங்களை சுயதனிமைப்படுத்துவதிலுமே நம் சமூகம் அச்சாணியாகத் திகழ்கின்றது. 

images/content-image/1702208146.jpg

இக்கால கட்டத்திலே நம் சமூக ரீதியில் பெண்களுக்கு பல்வேறான சிக்கல்கள் உளவியல் ரீதியாகக் காணப்படுகின்றன. பெண்களை வெறும் போகப் பொருளாகக் கருதி அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காது, சமூக உணர்வுக்கு மதிப்பளிக்காது செயல்படும் நிலைதான் அதிகம் காணப்படுகின்றது. அன்றைய சமுதாயம் நம் பெண்களை பெறுமதியான சொத்தாக மதித்தது. ஆனால் தற்போது பெண்களென்றாலே சமூகத்திலே ஒதுக்கப்பட்ட யடங்களாக கருதுகின்றார்கள். பண்டைய காலகட்டத்திலிருந்து இன்று வரை நம் பெண்களின் செயற்பாடு அடிமட்டத்தில் உள்ளதென்பது கவலைக்கிடமான விடயமாகும். அறிவு வளர்ச்சி, மிகத் தாழ்ந்த மட்டத்திலே உள்ளது. இந்நிலை மாறவேண்டுமென்பது பெண் என்ற ரீதியில் எனது கருத்தாகும். 

சமூகத்திலே பெண்கள் ஒருவர் தனது வயதிற்கு மாறுபாடில்லாது உடல், உள நிலையில் மன நிறைவும் மகிழ்ச்சியும் பெற்றிருத்தல் தொடர்பான திறன்களை பிரயோக உளவியல் கற்கை இயம்புகின்றது. அடுத்து பெண்கள் தங்களில் தாங்களே மதிப்பும் நம்பிக்கையும் கொண்டால் தான் எதிர் காலத்தில் பெண்களும் சிறந்த நிலைக்கு முன்னேற முடியும். தனி மனிதர்கள் ஏனையவர்களுடைய விருப்பு வெறுப்புகளை கருத்திற் கொள்ளாமல், தவறான வழியில் செயல்பட்டு உளப்பிரச்சினைகளால் நமது பெண்கள் சமூகத்திலிருந்து விலகிச் செல்பவர்களாகவே காணப்படுகின்றார்கள். அடுத்து கட்டிளமைப்பருவ கால கட்டமைப்பை உளவியல் ரீதியான சவாலாகக் கொண்டால், “ பெண்களுக்கு கூண்டுகளும், ஆண்களுக்கு சிறகுகளும்" கிடைக்கும் பருவம் என எம்மூர் கவிஞன் இப்பருவம் பற்றி பாடினார். 

images/content-image/1702208368.jpg

இன்றைய எமது நாட்டு கட்டிளமைப்பருவத்தினர் தம்மைப்பற்றி விஞ்ஞான பூர்வமான விளக்கமற்று பாலியல் கல்வி தொடர்பான பல பாதிப்புக்களையும் நெருக்கடிகளையும் நம் பெண்கள் சந்திக்கின்றனர். இவ்விடயங்களில் மறைக்கப்பட வேண்டியவை எதுவுமில்லை. இப்பருவத்தினருக்கு உண்மைக்குப் புறம்பான தம் தேவைகளையும் நிறைவேற்ற பலர் கீழ்த்தர உணர்ச்சிகளை தூண்ட சந்தர்ப்பங்களை வழங்குவர். 

நீல திரைப்படங்கள், மஞ்சள் பத்திரிகைகள் போன்றவற்றின் தவறான கருத்துக்களால் இப்பருவ பெண்கள் பற்பல பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்பருவத்தினருக்கு உண்மைக்குப் புறம்பான தம் தேவைகளை நிறைவேற்ற பலர் கீழ்தர உணர்ச்சிகளைத் தூண்ட சந்தர்ப்பங்களை வழங்குவர். நில திரைப்படங்கள் மஞ்சள் திரைக்கு பெண்களை ஆக்கிரமிப்புச் செய்யும் ஒரு கூட்டமே இன்று சமூக மட்டத்தில் அதிகளவில் உள்ளனர். இவ்வாறான் சமூக உளவியல் பிரச்சினைகளுக்கு நம் பெண்கள் முகங் கொடுக்க வேண்டிய நிலை மிகக் கவலைக்கிடமான விடயமாகும். 

images/content-image/1702208405.jpg

குமரப்பருவத்தினரின் சிறப்பியல்புகளாக விரைவான உடல் வளர்ச்சி, தன்னுணர்வு, பாலூக்கம் சுயசார்பு, இலட்சிய போக்கும் யதார்த்தமும் தொழில் தேர்வும் காணப்படுகின்றன. சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்திலும் உலகில் இலங்கைக்கு மூன்றாமிடம் என்ற வகையில் பாலியல் சார் அறிவை, விழிப்பை இளைஞர்களிடையே ஏற்படுத்த வேண்டும். இந்நிலை மாறுமென்றால் சமூகத்தில் பெண்களும் சிறந்த மனிதர்களாகவும் சிறந்த கல்விமான்களாகவும் உருவாக்கப்படுவார்கள். பணியிடங்களிலும் நம் பெண்களுடைய ஆடைக் குறைப்பினால் சிலர் வேறு விதமான இச்சைக்கு பெண்களை அடிமையாக்கும் நிலையும் காணப்படுகின்றது. இந்நிலை எப்போதும் அடியோடு அழிக்கப்படுகின்றதோ அப்போது நம் சமூகமும் உலகும் சிறந்து விளங்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை. 

 எல்லாத்துறைகளிலும் பெண்களின் பங்கு கூடினாலும் பொருளாதாரத்தில் சமத்துவம் பெற பல சவால்களுக்கு முகங் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. எவன் ஒருவனுக்கு சூழல் நேயம் பற்றி அக்கறை ஏற்படுகின்றதோ அப்போதே பெண்கள் மீதான அக்கறையும் உருவாகும். அப்போது தான் அவர்களின் மதிப்பும் நிலைமாறும், உயரும் உழைப்பு, தன்னம்பிக்கையும், முயற்சியும் இருந்தால் எந்தப் போட்டியையும் வெற்றிகரமாக்குவதோடு சோதனைகளை சாதனைகளாக மாற்ற முடியும். இதன் மூலம் பாரதி கண்ட புதுமைப் பெண்களாக மாறமுடியும் என்பது மகிழ்வான விடயமாகும். இன்றைய நாகரிகமானது அநாகரிகமாக ஒருசில பெண்களின் ஆடைகள் பழக்கவழக்கம் என்பன குறைக்கப்படுவதனால் சிலர் கயவர்களின் இரைக்கு உள்ளாகும் நிலை காணப்படுகின்றது. இது மிகவும் கவலையாகும். 

images/content-image/1702208429.jpg

எது எவ்வாறு இருப்பினும் எந்தச் சூழ்நிலையிலும் பெண்கள் தங்களால் எல்லாம் இயலும் என்ற மனத்தைரியத்தோடு செயற்பட்டால் நாம் அனைவரும் பல்வேறு சவால்களையும், உள நெருக்கடிகளையும் முகமகிழ்வுடன் எதிர்கொள்ள முடியும். இக்கால கட்டத்தில் பல பெண்கள் பல உள நெருக்கடிகளை எதிர்த்து செயற்பட்டமையால் இக்கட்டான சூழ்நிலையிலும் வைத்திய துறையில் பலர் பணிபுரிந்து மக்களின் உயிர்களைக் காப்பாற்றுகிறார்கள். அதேபோல மகளிருக்கு சிறப்பான வழிகாட்டல்கள் வாய்ப்புகள் தொழில் நுட்ப வசதிகள் வழங்கப்படுமாக இருந்தால் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல்வேறான துறைகளில் சாதிக்க முடியும்.  அப்போது நம் சமூகம் சமத்துவ நிலையை அடைய முடியும்.

 குறிப்பாக இன்றைய உலகில் பல விஞ்ஞானிகள் பெண்களாக இருக்கின்றார்கள் பல கண்டுபிடிப்புக்களை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.  நாசா விஞ்ஞானிகள் இதில் உள்ளடங்குவார்கள் பல நாடுகளில் விமானங்களை செலுத்தும் பெண்விமானிகள் பெண்களாக இருக்கின்றார்கள். அவர்கள் பல உளவியல் சவால்களைத் தாண்டிய நிலையை உணர முடிகிறது. எவ்வாறான சூழ்நிலையிலும் பெண்கள் தங்களது மனதை சோர்வடையச் செய்யக் கூட்டாதென்பது பெண்ணான என் கருத்தாகும். சுருங்கக் கூறின் சமூகத்தில் நம் பெண்கள் உளவியல் ரீதியாக எதிர் கொள்ளும் சவால்கள் என்பதை சிறு கவிதையை மையப்படுத்தி கூறுமிடத்து மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அன்று கூறியதைப் போல "மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும்...." இப்பாடலை நாம் பின்பற்றி இன்னும் இன்னும் பெண்கள் உயர வேண்டும். உளவியல் சவால்களை எதிர்த்து பல துறைகளில் சாதிக்க வேண்டும்.

 தற்காலப் புதுக்கவிதையோடு நோக்குமிடத்து "வாழ்வுரிமை வேண்டும், ஆட்சியுரிமை வேண்டும் பூவைக்கும் வரதட்சனை இல்லாமல் வாழ வழி வேண்டும் மாதர்க்கு...." என்று குறிப்பிட முடியும். அடிமைத்தனம் ஒளிந்து அடுப்பூதும் கைகள் உளநெருக்கடியை எதிர்த்து போராடுவது ஒவ்வொரு பெண்களின் கடமையும்பொறுப்புமாகும். சுருங்கக் கூறின், "இறைவனின் படைப்பில் நாம் எதிர்ப்பை வெல்ல புறப்படுவோம்! என சாதனையை படைக்க புறப்படும் பெண்கள் ஓர் நாள் அவர் செயல் கண்டு அகிலம் வியக்கும் அத்தனையும் அவள் கையில் தவழும்! ஆகவே புனிதப் பிறவியான பெண்களை நாம் போற்றுவோம். அவர்களின் உரிமைகளைப்பாதுகாப்போம். 

நன்றி : வி.அபிவர்ணா 

 முல்லைத்தீவு .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!