தந்தை செல்வாவின் வழி வந்த தமிழரசுக் கட்சியின் வரலாறு!

#SriLanka #Sri Lanka President #TNA #sritharan
Mayoorikka
10 months ago
தந்தை செல்வாவின் வழி வந்த தமிழரசுக் கட்சியின் வரலாறு!

கடந்த ஆண்டு இறுதிப் பகுதியிலிருந்து இந்த ஆண்டு வரை தமிழ் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக பரபரப்பாகவும் பேசபப்ட்டு வந்த விடையம் தான் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு விவகாரம்.

 ஒருவாறாக இந்த விடயத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு தலைவர் தெரிவிற்கான தேர்வு நடைபெற்று தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்வாகியுள்ளார். இந்த நிலையில் தமிழரசுக் கட்சி என்பது தமிழ்மக்களினுடைய அரசியல் வரலாற்றில் ஒரு வலுவான கட்சியாக இருந்துவருகின்றது. இந்த நிலையில் தமிழரசுக் கட்சியின் தலைவர்களாக தந்தை செல்வாவுடன் ஆரம்பித்து தற்பொழுது சிவஞானம் சிறிதரன் தெரிவாகியுள்ளார்.

 இவ்வாறாக தமிழ் அரசையால் வரலாற்றில் தவிர்க்கமுடியாத கட்சியாகவுள்ள தமிழரசுக் கட்சியின் வரலாறை அலசி ஆராய்வோம்

1949 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சியில் இருந்து பிரிந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் உருவாக்கப்பட்டதே இலங்கைத் தமிழரசுக்கட்சியாகும். 

 ஒன்று. பிரஜா உரிமை சட்டம் மற்றும் இந்திய பாகிஸ்தானிய பிரஜா உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட போது அதற்கு எதிராக தந்தை செல்வாவும் வைத்திய கலாநிதி நாகநாதன் மற்றும் கு. வன்னியசிங்கமும் அகில இலங்கை தமிழ் காங்கிரசிலிருந்து விலகி, எதிர்த்து வாக்களித்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை ஆரம்பித்தனர். மேற் சொன்ன சட்டங்களும் அதற்கு பின்னர் 1956ல் நிறைவேறற்றப்பட்ட அரச கரும மொழிச் சட்டமும் சோல்பரி அரசியலமைப்பின் 29வது பிரிவிற்கு முரணாய் இருந்த போதும் அச் சட்டங்களுக்கு எதிரான சவால்கள் நீதி மன்றத்தில் பலனளித்திருக்கவில்லை. ஆரம்ப காலங்களிலே காந்திய வழிகளாகிய ஒத்துழையாமை, சட்டமறுப்பு சத்தியாகிரகம் ஆகிய போராட்ட வடிவங்களையே இலங்கை தமிழ் அரசுக் கட்சி பின்பற்றியது. 1956ம் ஆண்டிலிருந்து கிரமமாக நடத்தப்பட்ட இப் போராட்டங்கள் 1961ம் ஆண்டு அரச இயந்திரத்தை வடக்கு கிழக்கெங்கும் முடக்குகிற அளவிற்கு வியாபித்தது. 

அதன் விளைவாக இலங்கை தமிழ் அரசு கட்சி அவசர கால சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டு அதன் தலைவர்கள் உட்பட 67 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு பனாகொடையில் சிறைவைக்கப்பட்டனர். 1970ம் ஆண்டிற்கு பின்னர் முதலாம் குடியரசு அரசியல்யாப்பு உருவாக்கப் பணிகளிலிருந்து வெளியேறிய பின் ஒத்துழையாமையும் சட்டமறுப்புப் போராட்டமும் உச்ச நிலையை அடைந்தன. 

தந்தை செல்வா தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தது தொடக்கம் புதிய அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல என்கின்ற நிலைப்பாடு வலுப்பெற்றது.

 அதன் பிரதிபலிப்பாக தமிழர் கூட்டணி உருவாக்கப்பட்டு, பின்னர் அது தமிழர் விடுதலை கூட்டணியாக மாறி 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 சமஷ்டி ஆட்சிக்கான   ஜனநாயக தீர்மானங்கள் புறக்கணிக்கப்பட்டதால் ஐரோப்பியர்களிடம் போரில் இழந்த எமது இறைமையை மீள் அமைப்போம் என்பதே அத் தீர்மானம். 

அத் தீர்மானத்தை விநியோகித்த காரணத்தினால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் மற்றும் இக் கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிகாரக மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்பாக வழக்கு தொடரப்பட்டது.

 எதிரிகள் சார்பில் தந்தை செல்வா தலைமையில் G. G பொன்னம்பலம், முருகேசு திருச்செல்வம், இராணி சட்டத்தரணிகள் உட்பட 67 தமிழ் சட்டத்தரணிகள் ஆஜரானார்கள். 

முதலாம் குடியரசு அரசியல்யாப்பு வலுவற்றதென்றும் அவசரகால சட்டவிதிகள் முறையாக பிரகடனப்படுத்தப்படவில்லை என்றும் வாதிட்டார்கள். எதிரிகளுடைய இரண்டாவது வாதத்தை ஏற்றுக்கொண்ட Trial at Bar நீதி மன்றம் எதிரிகளை விடுவித்தது. இத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மாற்றி அமைத்த போதும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீளக்கைது செய்யப்படவில்லை. 

இவ் வழக்கு இலங்கை சட்டச் சரித்திரத்திலே மிகவும் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. 1976ம் ஆண்டிற்கு பின்னர் இலங்கைத் தமிழ் அரசுக்கு கட்சி தமிழர் விடுதலை கூட்டணியாகவே இயங்கியது. 

தமிழர் விடுதலை கூட்டணி செயற்பட முடியாமல் நீதிமன்ற கட்டளையினால் 2003ம் ஆண்டு முடக்கப்பட்ட போது மீண்டும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியாக இயங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

 Trial -at -Bar வழக்கு முடிவிற்கு பின்னர் நீதிமன்றங்களினூடாக தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. 1971 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்ட பின் அச்சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட தமிழ் இளைஞர்களுக்காக கட்சியை சார்ந்த சட்டத்தரணிகள். வழக்காடினார்கள். 

அதே போல் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பின் கீழ் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளையும் முன்னின்று நடத்தினார்கள். யுத்த காலத்தின் போது மீறப்பட்ட உரிமைகள் சம்பந்தமாக பலதரப்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களிலே முன்னெடுக்கப்பட்டு வாதாடப்பட்டன.

 உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் தமிழ் மக்களுடைய பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கெதிராக 2003 ஆம் ஆண்டு கட்சியின்   தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களின் பெயரிலே உயர் நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

 2007 ஆம் ஆண்டு இவ்வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவின்படி இந்நிலங்களிலே மக்கள் மீளவும் மீள்குடியேற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். இதே காலகட்டத்தில் கிழக்கில் சம்பூரிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் அவர்கள் நிலங்களிலே மீண்டும் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்ற கட்டளையும் உச்சநீதிமன்றில் பெறப்பட்டது.

 இலங்கை தமிழ் அரசுக்கட்சி முன்னெடுத்த இவ்வழக்குகளின் காரணமாக இராணுவத்துக்கென்று அபகரிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பூர்வீக நிலங்கள் திரும்பவும் எமது மக்களுக்கு கிடைத்திருக்கிறது. இன்னமும் விடுவிக்கப்படவிருக்கின்ற நிலங்கள் தொடர்பாக மேற்சொன்ன வழக்கு இப்பொழுதும் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. 

இது தவிர வேறு பல முக்கிய விடயங்களிலும் எமது மக்களுடைய உரிமை மீறல்கள் சம்பந்தமாக நீதிமன்றத்தை நாடி பல சந்தர்ப்பங்களிலே வெற்றி வாகை சூடிய பெருமை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு உண்டு. கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டது தொடக்கம் அதிகாரப்பகிர்வுக்கெதிராக கொண்டு வரப்பட்ட திவிநெகும சட்டமூலத்தை எதிர்த்தது வரை பலதரப்பட்ட உதாரணங்களை இதற்கு மேற்கோளாக காட்டலாம். இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய இச்சட்ட அணுகுமுறையானது 

தமிழ் மக்களுடைய உரிமைகளோடு மட்டுப்படுத்தப்படவில்லை. நாட்டிலே பொதுவாக அடக்குமுறைக்கெதிராகவும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கெதிராகவும் சட்டத்தின் ஆட்சி சீர்குலைக்கின்ற போது மற்றும் நல்லாட்சி பண்புகளை மேம்படுத்துவதற்கும் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னோடியாக திகழ்ந்திருக்கிறது. சென்ற வருட இறுதியிலே நாட்டின் அரசியலமைப்புக்கு மாறாக ஜனாதிபதியே செயற்பட்ட போது அதை எதிர்த்து நாட்டிலே ஒரு பாரிய சட்டப்புரட்சியை ஏற்படுத்தி முழு நாட்டிலும் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டிய முயற்சியில் இலங்கை தமிழரசுக்கட்சியே முன்னணி வகித்தது.

 இலங்கையின் நீதித்துறையில் நாம் நம்பிக்கை வைக்க முடியாது என்பதை நிரூபிப்பதற்காக நீதிமன்ற சவால்களை நாம் முன்னெடுக்கக் கூடாது என்று அவ்வணுகுமுறையை புறக்கணிக்கிறவர்கள் மத்தியில் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் சட்ட சவால்களை பதிவு செய்ய வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்படுகின்ற கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி. பதிவு செய்வதற்காகவாவது தொடரப்படுகிற வழக்குகளை திறமையாக கையாளுவதன் மூலம் அநேக தடவைகளில் வெற்றிகளையும் ஈட்டி எமது மக்களுக்கு நிவாரணங்களை பெறுவதோடு உரிமை மீறல்களை நிரூபிக்கின்ற செயற்பாட்டில் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்துவமான பங்களிப்பை செய்து வருகிறது. 1961 ஆம் ஆண்டு சில மாதங்கள் தடை செய்யப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சி 1976 இல் பாரியதொரு சட்ட சவாலுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. 

அதை தந்தை செல்வா தலைமையிலான சட்ட வித்தகர்கள் முறியடித்து வெற்றி கண்டார்கள். போருக்கு பின்னர் 2013 ஆம் 2014 ஆம் ஆண்டுகளில் இலங்கை தமிழரசுக்கட்சியை தடை செய்யவும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களை சிறைக்கனுப்பவும், சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முதல் 5 வழக்குகளும் எமது வடக்கு மாகாண சபை தேர்தல் அறிக்கையில் பிரிவினையை கோருவதாகவும் அரசியலமைப்பின் 6ஆம் திருத்தத்திற்கு மாறான செயற்பாடு என்றும் முறைப்பாடு செய்யப்பட்டது.

 2014 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட 6 வது வழக்கிலே இலங்கை தமிழரசுக்கட்சியினுடைய யாப்பு இணைப்பாட்சியை கொள்கையாக கொண்டிருப்பதன் காரணமாக பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த வழக்கு முதலிலே விசாரிக்கப்பட்டு வாதிக்கப்பட்டது. சந்திரசோம எதிர் மாவை சேனாதிராஜா என்கின்ற இவ்வழக்கின் தீர்ப்பு 2017 ஆகஸ்ட் 4 ஆம் திகதி பிரதம நீதியரசர் உட்பட 3 நீதிபதிகளடங்கிய உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பின்படி இறைமை சுயநிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் இணைப்பாட்சி ஆட்சிமுறை ஒன்றை கோருவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு உரித்துண்டு என்று கூறப்பட்டுள்ளது. 

70 வருடங்களுக்கு முன்னர் இணைப்பாட்சியை கோரி உருவாக்கப்பட்ட எமது கட்சி 1951 ஆம் ஆண்டு திருகோணமலை மாநாட்டிலே இவ்வாட்சிமுறை எமது இறைமையின் அடிப்படையிலும் சுயநிர்ணய உரிமையிலிருந்தும் எழுகின்றதென்றும் பிரகடனப்படுத்தி இருக்கிறோம். இணைப்பாட்சியானது நாட்டை இரண்டாக பிரிக்கும் என்று சிங்கள தலைவர்கள் தமது மக்களுக்கு ஆரம்ப காலம் தொட்டே பொய்ப்பிரச்சாரம் செய்து வந்துள்ளனர். 1961 ஆம் ஆண்டு கட்சியை தடை செய்த போது கூட, அப்போதைய பிரதம மந்திரி சிறிமாவோ பண்டாரநாயக்க இதையே கூறியிருந்தார். 

பல தசாப்தங்களுக்கு பிறகு, இடைப்பட்ட காலத்திலேயே தனி நாட்டுக்கான ஆயுத போராட்டத்தை நடத்திய பின்னரும் கூட, இலங்கையின் உச்ச நீதிமன்றமே சமஷ்டி ஆட்சி முறையை கோருவது சட்டபூர்வமான செயற்பாடு என்று தீர்ப்பளித்திருக்கிறது. சூழ்நிலைகள் சாதகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சர்வதேச சட்டத்தின் கீழ் எமக்கு இருக்கின்ற உரித்தை இலங்கையின் நீதிமன்றங்களில் கூட தொடர்ச்சியாக வாதிட்டதன் மூலம் எமது கொள்கை நிலைப்பாடு சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் நியாயமானதொன்றென்பதை இலங்கை தமிழரசுக்கட்சி நிரூபித்திருக்கிறது. சமஷ்டி என்கின்ற அரசியல் தீர்வு விடயத்தில் மட்டுமல்லாது எமது சமூக பொருளாதார கலாச்சார உரித்துக்கள் சம்பந்தமாகவும் இதே அணுகுமுறை பல சாதகமான முடிவுகளை எமக்கு தந்திருக்கிறது.

 எமது சூழ்நிலையில் சட்டத்தின் துணையை நாடுவது பிரயோசனமற்றது என்ற நிலைப்பாட்டை எடுக்கின்ற மற்றைய கட்சிகளை விட மாறுபாடான நிலைப்பாட்டை எடுத்து அதிலே முன்னேற்றத்தை கண்டிருப்பது இலங்கை தமிழரசுக்கட்சி மட்டுமே”.  

 திருகோணமலை திருக்கோணேஸ்வரக் கோயிலின் தர்ம கர்த்தாவாக இருந்த அன்னவர்தான் தமிழரசுக்கட்சியின் வீட்டு சின்னத்தை வடிவமைத்து கொடுத்தவர்.

 இந்தநிலையில் தற்பொழுது தமிழரசுக் கட்சியின் தலைவராக சிவஞானம் சிறிதரன் நேற்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!