ஆயுத மோதலுக்கு வழிவகுக்குமா தாய்வான் தேர்தல் முடிவுகள்? சுவிசிலிருந்து சண் தவராஜா

#China #world_news #Article #Lanka4 #Swiss
Mayoorikka
9 months ago
ஆயுத மோதலுக்கு வழிவகுக்குமா தாய்வான் தேர்தல் முடிவுகள்? சுவிசிலிருந்து சண் தவராஜா

தாய்வான் நாட்டில் அரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. தற்போதைய துணை அரசுத் தலைவரான லாய் சிங்-ரே 40 விழுக்காடு வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். 

மேற்குலகின் தீவிர ஆதரவாளராகக் கருதப்படும் இவர் சீனாவின் விருப்புக்கு மாறாக தாய்வான் தனித்த நாடாகச் செயற்பட வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர். அவரைக் 'குழப்பவாதி' எனச் சீனத் தரப்பு வர்ணித்துள்ள நிலையில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் அவரது வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது.

 'ஒற்றைச் சீனா' என்ற கொள்கையை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ள போதிலும், சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் தாய்வானை நிறுத்தி தனது பூகோள நலன்களைப் பாதுகாப்பதை ஒரு கொள்கையாகவே அமெரிக்கா கடைப்பிடித்துவரும் நிலையில் லாயின் தேர்தல் வெற்றி அடுத்துவரும் நான்கு வருடங்களுக்கு தென் சீனப் பிராந்தியத்தைக் கொதிநிலையில் வைத்திருக்கும் என நிச்சயம் நம்பலாம்.

 தனது போட்டியாளர்கள் என அமெரிக்கா கருதும் நாடுகளைப் போரில் இழுத்துவிட்டு அவற்றைப் பொருண்மிய அடிப்படையிலும், படைத்துறை அடிப்படையிலும் பலவீனப்படுத்த அமெரிக்கா மேற்கொண்டுவரும் முயற்சிகளின் ஒரு அங்கமாக சீனாவையும் தாய்வானுடன் படைத்துறை அடிப்படையில் மோதலில் ஈடுபடுத்த அமெரிக்கா பலவருட காலமாக முனைந்து வருவது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. அந்த அடிப்படையில் தற்போதைய தேர்தல் வெற்றி தந்துள்ள உற்சாகத்தில் அமெரிக்கா இரகசியமாகவும், பகிரங்கமாகவும் பல்வேறு காய்நகர்த்தல்களில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. 

இத்தகைய பின்னணியில் தனது உயர்மட்டக் குழுவொன்றை அமெரிக்கா தாய்வானுக்கு அனுப்ப உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவின் மேனாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் ஹாட்லி தலைமையிலான குழுவொன்று இன்று ஞாயிற்றுக் கிழமை தாய்வான் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவில் மேனாள் துணை இராஜாங்க அமைச்சர் ஜேம்ஸ் ஸ்ரைன்பேர்க் உள்ளிட்டோர் இடம்பெறுவர் எனத் தெரிகின்றது.

 சீனாவின் ஒரு அங்கமான தாய்வான் தனிநாடாக உருவாகியது 1949இல். ஆக்கிரமிக்கப்பட்ட சீனாவில் யப்பானுக்கு எதிராக நடந்த சுதந்திரப் போரில் நண்பர்களாக இருந்து பின்னாளில் பகைவர்களாக மாறிய ஷியாங் கை சேக்கின் கோமிங்தாங் உறுப்பினர்கள் 1949இல் மாவோ சேதுங் தலைமையில் மக்கள் சீனம் உருவான போதில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் உதவியுடன் தப்பியோடி தஞ்சம் புகுந்த இடமே தாய்வான்.

 சீனாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதியே தாய்வான் என எப்போதும் கூறிவரும் சீன அரசாங்கம் தாய்வானைப் பலாத்காரமாகக் கைப்பற்ற இதுவரை முயற்சியெதுவும் எடுக்கவில்லை. சமாதானமான முறையில் தாய்வானை பிரதான நிலப்பரப்புடன் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என சீனா தொடர்ச்சியாகக் கூறி வருகின்ற போதிலும் இன்றுவரை அத்தகைய முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை. உலகின் பெரும்பாலான நாடுகள் 'ஒற்றைச் சீனா' என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. 

விரல்விட்டு எண்ணக் கூடிய நாடுகள் மாத்திரமே இதுவரை தாய்வானை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளன. எனினும் தொழில்நுட்ப அடிப்படையில் பெருவளர்ச்சி கண்டுள்ள தாய்வானுடன் பெரும்பாலான உலக நாடுகள் வணிக உறவுகளைப் பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தாய்வானை 1949 முதல் தொடர்ச்சியாக ஆட்சிசெய்து வந்த கோமிங்தாங் கட்சி ஒரு கட்டத்தில் சீனாவுடன் உறவுகளைப் பேணத் தொடங்கியது. 

சீனாவின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டு, அதன்கீழ் ஒரு நாடாக விளங்கத் தனது சம்மதத்தையும் 1992இல் தெரிவித்திருந்தது. எனினும் இது தொடர்பில் தெளிவான வரைபடம் எதனையும் இரு தரப்பும் இணைந்து தயாரித்து இருக்கவில்லை. இந்நிலையில் தற்போதைய அரசுத் தலைவி சாய் இங்-வென் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கட்சி எட்டு வருடங்களுக்கு முன்னர் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது. தாய்வான் தனித்த, இறைமையுள்ள ஒரு நாடாக விளங்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட இக் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்த போதிலும், தனது கொள்கையை உரக்கப் பேசிவந்த போதிலும் தனது கோரிக்கையை வென்றெடுக்க எந்தவொரு முயற்சியையும் மேற்கொண்டிருக்கவில்லை.

அந்த ஆட்சியில் துணை அரசுத் தலைவராக விளங்கிய லாய் தற்போது வெற்றி பெற்றுள்ள நிலையிலும், அமெரிக்க அரசுத் தலைவரின் உத்தியோகபூர்வ வசிப்பிடமான வெள்ளை மாளிகையில் தான் உலா வரவேண்டும் என விருப்பத்தை வெளியிட்டுள்ள நிலையிலும் தாய்வானின் தேர்தல் முடிவுகள் பேசுபொருளாக மாறியுள்ளன. மோதல் போக்கு உருவாகும் நிலையில் தாய்வான் மீது சீனா படை நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த நிலப்பரப்பைத் தன்னோடு இணைத்துக் கொள்ள முயலுமா? போர் ஒன்று உருவாகும் நிலையில் தாக்குப்பிடிக்கும் நிலையில் தாய்வான் அரசாங்கமும் படைத்துறையும் தயாராக உள்ளனவா? போரை எதிர்கொள்ளத் தாய்வான் மக்கள் தயாராக உள்ளனரா? என்பன போன்ற கேள்விகள் தற்போது ஊடகங்களில் நிரம்பி வழிகின்றன.

 எதிர்காலம் என்னவாகும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால், ஜனநாயகத்தின் வெற்றி என அமெரிக்காவினால் கொண்டாடப்படும் வில்லியம் லாய் என அழைக்கப்படும் லாயின் வெற்றி உண்மையிலேயே அவருக்கு கட்டற்ற அதிகாரத்தைத் தந்துள்ளதா என்பதைப் பார்ப்பது நல்லது. தாய்வான் தேர்தல்களில் மக்கள் எப்போதுமே பேரார்வத்துடன் வாக்களிப்பது வழக்கம். ஆனால் இம்முறை 71 விழுக்காடு மக்களே தேர்தலில் வாக்களித்திருக்கின்றார்கள். இன்று வரையான காலப்பகுதியில் பதிவான வாக்குகளில் இதுவே இரண்டாவது குறைந்த வாக்கு வீதம் எனப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 

அது மாத்திரமன்றி லாய் 40 விழுக்காடு வாக்குகளை மாத்திரமே பெற்று வெற்றி பெற்றுள்ளார். தாய்வான் வரலாற்றில் 50 விழுக்காடு வாக்குகளுக்கும் குறைவாகப் பெற்று ஒருவர் அரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்படுவது இதுவே முதல்முறையாக உள்ளது. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களும் முறையே 33.5 மற்றும் 26.5 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளனர். அது மாத்திரமன்றி 113 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில் ஜனநாயக முற்போக்குக் கட்சியால் 51 உறுப்பினர்களை மாத்திரமே வெற்றிகொள்ள முடிந்தது. 

கோமிங்தாங் கட்சியோ 52 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. புதிதாக உருவாகிய தாய்வான் மக்கள் கட்சி எட்டு ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன் ஆட்சியைத் தீர்மானிக்கும் கட்சியாகவும் மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தேர்தலில் வெற்றி பெற்றுள்ள லாய் அரசுத் தலைவராக தனது பதவியை எதிர்வரும் மே மாதத்தில் பொறுப்பேற்க உள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில் சீனாவுக்கு எதிராகக் கொம்பு சீவிவிடும் மேற்குலகின் ஆதரவை மாத்திரம் நம்பி அவர் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பாரா அல்லது வழக்கமான அரசியல்வாதிகளைப் போன்று வாக்காளர்களைக் கவர்வதற்காக அவர் சீனாவுக்கு எதிராகப் பேசினாரா என்பது அடுத்துவரும் சில மாதங்களில் முழுமையாகத் தெரிந்துவிடும். 

 ஆனால், தனிநாடாகத் தாய்வானை அங்கீகரிக்கக் கோரும் முயற்சியில் லாய் தீவிரமாக ஈடுபடுவாராக இருந்தால் தென்சீனப் பிராந்தியத்தில் பாரிய இரத்தக் களரி ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் போகலாம் என்பதே கசப்பான யதார்த்தம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!