போட்டி நடுவர்கள் மீது குற்றம் சுமத்தும் இலங்கை அணி தலைவர் வனிது ஹசரங்க
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.
தம்புள்ளை - ரங்கிரிய மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களை பெற்றது. பின்னர் 210 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
இந்த போட்டியின் கடைசி ஓவரின் நான்காவது பந்து தொடர்பில் போட்டி நடுவர் வழங்கிய தீர்மானம் பற்றி போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை அணியின் தலைவர் வனிது ஹசரங்க கருத்து வெளியிட்டார்.
சர்வதேசப் போட்டியில் இவ்வாறான நடுவர் தீர்மானங்களை எதிர்பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பந்து இன்னும் கொஞ்சம் உயர்ந்திருந்தால், பந்து துடுப்பாட்ட வீரரின் தலையில் பட்டிருக்கும் என்றும், அதனை பார்க்கவில்லை என்றால், அந்த நடுவர் சர்வதேச தரத்திற்கு பொறுத்தமற்ற நடுவர் எனறும் வனிந்து ஹசரங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, நடுவர் வேறு பணியைத் தேர்ந்தெடுப்பதே பொருத்தமானது என்றும் அவர் வலியுறுத்தினார். இவ்வாறான நோ போல் பிரச்சினைகளுக்கு நடுவர் தீர்மானங்களை மூன்றாவது நடுவருக்கு அனுப்பி மீளாய்வு (review) செய்ய வேண்டும் எனவும் வனிந்து ஹசரங்க குறிப்பிட்டுள்ளார்.
தேவைப்பட்டால், மூன்றாவது நடுவருக்கு அதை பரிந்துரைக்க கள நடுவருக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.