நாளை மலரும் மாசி மகத்தன்று சுமங்கலிகள் தமது தாலிக் கயிற்றை மாற்றுதல் நீண்ட ஆயுளைத்தரும்
மாசி மகம் என்து அனைத்து விதமான பாவங்களும் நீங்கி, புண்ணிய பலன்களை பெறுவதற்கும், வேண்டிய வரங்களை பெறுவதற்கு, அனைத்து விதமான தெய்வங்களின் அருளை பெறுவதற்கும் ஏற்ற சிறப்பான நாளாகும்.
இந்த நாளில் எந்த ஒரு வழிபாடு, தான தர்மம், புனித நீராடுதல், முன்னோர் தர்ப்பணம் என எதை செய்தாலும் அது பல மடங்கு அதிகமான பலன்களை தரும்.
மாசி மாத பெளர்ணமியும், மகம் நட்சத்திரமும் இணைந்து இருக்கும் நாளையே நாம் மாசி மகம் என்கிறோம். இந்த நாளில் தங்களின் தாலி பாக்கியம் நிலைக்க வேண்டம் என சுமங்கலி பெண்கள் பலர் அம்பிகையை வேண்டிக் கொண்டு விரதம் இருந்து, தாலி கயிற்றை மாற்றிக் கொள்வார்கள்.
சுமங்கலி பெண்களுக்கு தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் வாங்கி இந்த நாளில் கொடுப்பதும் மங்கலகரமான பலன்களை தரும். மாசி கயிறு பாசி படியும் என்று ஒரு பழமொழி உண்டு.
அதாவது மாசி மாதத்தில் தாலி கயிறு மாற்றிக் கொண்டால் பாசி படியும் அளவிற்கு அவர்களின் தாலி பாக்கியம் நீடித்து நிலைத்திருக்கும் என்று அர்த்தம். பொதுவாக வருடத்திற்கு இரண்டு முறையாவது தாலி கயிறு மாற்ற வேண்டும்.
அப்படி மாசி மகத்தன்று மாற்று வழக்கம் உள்ளவர்கள் அல்லது தாலி கயிறு மாற்றி பல நாட்கள் ஆகிறது, மாற்ற வேண்டும் என்பவர்கள் மாசி மகத்தன்று மாற்றிக் கொள்ளலாம்.
காலை குளித்து விட்டு, வீட்டில் விளக்கேற்றி வழிபட்ட பிறகு, காலை 7 மணி முதல் 8 மணி வரை அல்லது காலை 11 மணி முதல் 12 மணி வரையிலான நேரத்தில் தாலி கயிற்றை மாற்றிக் கொள்ளலாம்.
உச்சி பொழுதிற்கு பிறகு, குறிப்பாக மாலை நேரத்தில் தாலி கயிற்றை மாற்றக் கூடாது. மாசி மகத்தன்று மாற்றும் வழக்கம் இல்லை என்கிறவர்கள், அடுத்து வரும் காரடையான் நோன்பு அன்று தாலி கயிற்றை மாற்றிக் கொள்ளலாம்.