பெண்களில் முதலீடு செய்யுங்கள் முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்: மகளிர் தின வரலாறு
உலகமெங்கும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச மகளிர் தினம் பெண்களின் சாதனைகள், போராட்டங்கள் மற்றும் பாலின சமத்துவத்திற்கான உரிமையை நினைவுகூரும் நாளாகும்.
அதே வேளையில் கலாச்சாரம், அரசியல் மற்றும் சமூகத்தில் பல்வேறு துறைகளில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. மகளிர் உரிமைகளைக் கோரவும் அவர்களின் சாதனைகளைப் பாராட்டவும் ஒரு வாய்ப்பாக இந்நாள் உள்ளது.
1900களின் தொடக்கத்தில் அமெரிக்காவிலும் ஐரோப்யபிய நாடுகளிலும் பெண்ணுரிமை குறித்த பெரும் நடைபெற்ற விவாதங்கள் மகளிர் தினக் கொண்டாட்டங்களுக்கு வேராக அமைந்தன.
2024 ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் 'பெண்களில் முதலீடு செய்யுங்கள், முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்' என்பதாகும். Inspire Inclusion மற்றொரு கருப்பொருளாகும்.
அதாவது சமூகத்தில் உள்ள அனைத்து அம்சங்களிலும் பெண்களுக்கு பன்முகத்தன்மை மற்றும் அதிகாரமளித்தலின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. 1908ல் நியூயார்க் நகரில் 15,000 பெண்கள் வாக்குரிமையையும் இன்னும் மேம்பட்ட வேலைச் சூழலையும் கோரி வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அந்த எழுச்சியின் நினைவாக 1909ல் அமெரிக்காவில் முதன் முறையாக தேசிய மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது. 1910ல் டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற அனைத்துலக பணிபுரியும் மகளிருக்கான மாநாட்டில், அனைத்துலக மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கிளாரா ஸேட்கின் யோசனை தந்தார். அதை சில நாடுகள் ஏற்றுக்கொண்டன.
ஆனால் மகளிர் தினத்துக்கென்று குறிப்பிட்ட தேதியை அறிவிக்காமல், ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு தேதியில் கொண்டாடின. 1911ல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்ணுரிமைக்கு ஆதரவாக ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் திரண்டனர்.
ரஷ்யாவில் உழைப்பாளி களின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் திட்டமிடப்பட்ட நிலையில் அந்நாட்டுப் பெண்கள் முன்கூட்டியே ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். அந்நாளான மார்ச் 8அம் தேதி பின்னர் அனைத்துலக மகளிர் தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெண்களின் கலாச்சார, அரசியல், சமூக மற்றும் பொருளாதார சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
பாலினச் சார்பு மற்றும் பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டு வந்து பாலின சமத்துவத்தை அடைவதற்கான முயற்சிகளை ஊக்குவிக்கும் வாய்ப்பாக இந்த நாள் அமைகிறது.
சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சமத்துவமின்மை, பாலின அடிப்படையிலான வன்முறை, கல்வி மற்றும் வரையறுக்கப்பட்ட பொருளாதார வாய்ப்புகள் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மகளிர் தினம் சிறந்த அடித்தளமாகும்.
பாலின சமத்துவத்தை ஊக்குவித்து, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் தீர்வுகளை நோக்கிச் செயல்படுவதற்கும், ஏற்படுத்த வேண்டியை முன்னேற்ற பாதைகள் பற்றி சிந்தித்துப் பார்ப்பதற்கும் இது சரியான தருணமாகும்.