IPL - பெங்களூருவை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்து 173 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் அனுஜ் ராவத் 25 பந்தில் 48 ரன்களும், தினேஷ் கார்த்திக் 26 பந்தில் 38 ரன்களும் அடித்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் முஸ்டாபிஜூர் ரஹ்மான் 4 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கினார் ருதுராஜ் கெய்க்வாட். மறுமுனையில் ரவீந்திரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அணியின் ஸ்கோர் 71 ரன்னாக இருக்கும்போது 7-வது ஓவரின் கடைசி பந்தில் ரவீந்திரா 15 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். ரகானே தனது பங்கிற்கு 19 பந்தில் 27 ரன்கள் சேர்த்தார். டேரில் மிட்செல் 18 பந்தில் 2 சிக்சருடன் 22 ரன்கள் அடித்தார்.
16-வது ஓவரில் 12 ரன்கள் கிடைத்தது. 17-வது ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி 3 ஓவரில் 18 ரன்களே தேவைப்பட்டது. 18-வது ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி 2 ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால் 18.4 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது. ஷிவம் துபே 34 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.