தலைமன்னார் - கவயன் குடியிருப்பு பகுதியில் அடாத்தாக பிடிக்கப்பட்ட காணியில் கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு
தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவயன் குடியிருப்பு பகுதியில் அடாத்தாக பிடிக்கப்பட்ட காணியில் கனிய மணல் அகழ்வு இடம் பெற இருந்த நிலையில் இன்றைய தினம் காலை 10 மணியளவில் ஒன்று கூடிய அப்பகுதி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.
தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவயன் குடியிருப்பு பகுதியில் சுமார் 160 ஏக்கர் பனை மரங்களை கொண்ட குறித்த காணி சட்ட விரோதமாக பிடிக்கப்பட்டு குறித்த காணி அடைக்கப்பட்டுள்ளது.
குறித்த காணி இந்திய தனியார் கம்பெனி ஒன்றிற்கு கனிய மணல் அகழ்வுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த காணியில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனை மரங்கள் அழிக்கப்பட்டு, கனிய மணல் அகழ்வு இடம்பெற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு,பாதிக்கப்பட்ட மக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த காணிக்குள் இன்றைய தினம் காலை வருகை தந்த சிலர் காணியில் கனிய மணல் அகழ்வில் ஈடுபட நடவடிக்கை எடுத்த நிலையில் அப்பகுதி மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பை தெரிவித்தனர்.
குறித்த காணியில் என்ன திட்டம் முன்னெடுக்கப் போகிறார்கள் என்ற விடையம் தமக்கு தெரியாது என்றும் வெளிப்படையாக எமக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அப்பகுதிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மக்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் அடாத்தாக பிடிக்கப்பட்ட காணி பகுதிக்குச் சென்று அங்கு பொறுப்பாக இருந்தவருடன் கலந்துரையாடியதுடன்,மக்கள் எதிர்ப்பு தெரி விக்கின்றமையினால் இவ்விடத்தில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்க வேண்டாம் என்றும் மக்களுடன் பிரிதொரு தினத்தில் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் குறித்த காணியில் நின்ற உரிய நபர் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காத நிலையில் அங்கிருந்து வெளியேறினர்.