வெளிநாட்டில் வேலை செய்ய ஆசை உள்ளவர்களின் கவனத்திற்கு
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்வரும் யூலை மாதம்12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் இரண்டு நாட்கள் மக்கள் நடமாடும் சேவை கிளிநொச்சியில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நாடுபூராகவும் முன்னெடுத்துள்ள கிளிநொச்சி மாவட்டத்திற்கான "வெல்வோம் ஸ்ரீலங்கா" மக்கள் நடமாடும் சேவை தொடர்பான முன்னாயத்த கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நளாயினி இன்பராஜ் அவர்களின் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.எம் பியதிஸ்ஸ மற்றும் அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட உதவி மாவட்ட செயலர்,பிரதேச செயலகங்களின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், மாவட்ட பொலிஸ் அதிகாரி, மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்,ஏற்பாடுகளோடு தொடர்புடைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சிக்கு SMART எதிர்காலம்" எனும் தொனிப்பொருளில் இந்த மக்கள் நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொழில் திணைக்களம்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இலங்கை மத்திய வங்கி, ஊழியர் நம்பிக்கை நிதியம், தொழிற் பயிற்சி நிலையங்கள், தேசிய தொழில்சார் கற்கை நிறுவனம்,தேசிய தொழிற் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம்,ஆகியவற்றுடன், அரச வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள்,அனுமதி பத்திரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள், சிறு தொழில் அபிவிருத்தி பிரிவு, கைத்தொழில் அமைச்சு உள்ளிட்ட அரச தனியார் நிறுவனங்களின் ஊடாக பெற்றுக்கொள்ள கூடிய சேவைகள் இந்த நடமாடும் சேவையின் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளன.
கிளிநொச்சிக்கு SMART எதிர்காலம்’ என்ற கருத்தாக்கத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிவோருக்கு தேவையான பல சேவைகளோடு இளைஞர்களுக்காக புதிய தொழிற்சந்தைகளுக்கான வாய்ப்புக்கள் மற்றும் தொழிற்துறை பயிற்சிகளோடு சுபீட்சமான எதிர்காலத்துக்கு முன்னோடியாக அமையவுள்ள மக்கள் நடமாடும் சேவையானது வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் அதனோடு இணைந்த நிறுவனங்களின் அனைத்து சேவைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் "ஜயகமு ஸ்ரீலங்கா" எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது.