கிளப் வசந்தவின் படுகொலை தொடர்பில் வௌிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்!
துபாயில் பதுங்கியிருக்கும் லொக்கு பெடீ மற்றும் கொனா கோவிலே சாந்த என்ற இரு குற்றவாளிகள் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்தவைக் கொலை செய்யும் நடவடிக்கையை நேரடியாகத் திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் மையத்தில் நேற்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா என்ற வர்த்தகர் உயிரிழந்துள்ளார். இதில், பிரபல பாடகி கே.சுஜீவா உட்பட 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கிளப் வசந்த உட்பட இருவர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கெமராக்களில் பதிவாகியுள்ளன.
அதன்படி, மேற்கு தெற்குப் பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், மேற்கு தெற்கு குற்றப்பிரிவு உட்பட 6 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்தன. இதன் விளைவாக, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த கார், கொலை நடந்த சிறிது நேரத்தின் பின்னர், கடுவெல, கொரதொட்ட வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. காரில் வந்தவர்கள் கொரத்தொட்டவில் இருந்து வேறொரு வேனில் தப்பிச் சென்ற நிலையில், அந்த வேனும் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டது. புலத்சிங்கள தெல்மெல்ல பிரதேசத்தில் பாழடைந்த காணி ஒன்றில் விடப்பட்டது.
அதன் இலக்கத் தகடுகளும் குற்றவாளிகளால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் பொலிஸ் மோப்ப நாயைப் பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வேனில் இருந்தவர்கள் இரத்தினபுரி அயகம பகுதியை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், வேனில் இருந்த 6 கைரேகைகளில், 2 கைரேகைகளை பொலிசார் கண்டுபிடித்தனர். வேனின் முன் இடது சக்கரத்திற்கு அருகாமையில் பெலியத்த பிரதேசம் என்ற முத்திரை காணப்பட்டதையடுத்து குறித்த வேன் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவருடையது என சந்தேகிக்கப்படுகிறது. இதனிடையே, பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 5 பேரிடம் பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். துபாயில் பதுங்கியிருக்கும் லொக்கு பெடீ மற்றும் கொனா கோவிலே சாந்த ஆகிய இரு குற்றவாளிகளால் நேரடியாக திட்டமிட்டு, கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேராவை கொலை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இதுவரையான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கஞ்சிபானி இம்ரானின் நேரடி தொடர்பு இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட தோட்டா உறைகளில் எழுதப்பட்ட KPI என்ற குறிப்பு காரணமாக அவர் சந்தேகிக்கப்படுகிறார். இதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் குணமடைந்து வரும் பாடகி கே. சுஜீவாவின் உடல்நிலை தற்போது முன்னேற்றமடைந்து வருவதாக அதன் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார். அவருக்கு 5 மருத்துவக் குழுக்கள் இணைந்து 4 மணி நேர சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். துப்பாக்கிச் சூட்டில் அவரது இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதேவேளை, கிளப் வசந்தாவின் மனைவி ஹோமாகம வைத்தியசாலையில் இருந்து களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஏனைய இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கிளப் வசந்த மற்றும் மற்றைய நபரின் சடலங்கள் தொடர்ந்தும் ஹோமாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.