கிளிநொச்சி அருள்மிகு கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு!
கிளிநொச்சி அருள்மிகு கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு 10/07 /2024 அன்று புதன்கிழமை காலை 9 மணி தொடக்கம் நடைபெற திருவருள் பாலித்திருக்கிறது.
கிளிநொச்சிமண்ணின் வரலாற்றோடும் வாழ்வோடும் பின்னிப்பிணைந்த தேவஸ்தானம் எங்கள் கந்தன் ஆலயம். நீர் வளமும் நிலவளமும் செழித்தோங்கும் கிளி நொச்சி நகருக்கு அருள் பாலிப்பவர் அவர் கையேந்தி வரம் கேட்ட எவரையும் கைவிடாத எம்பெருமான் மகா கும்பாபிஷேகம் காணுவது மனம் நிறைவைத் தருகிறது.
இந்த மண்ணின் வரலாற்றில் வெற்றிவேலு முகாந்திரம் கந்தையா விதானையார் வரையாக வளர்ந்த திருக்கோயில் குமாரசுவாமி குருக்கள் இரத்தினேஸ்வர குருக்கள் ஜெகதீஸ்வர குருக்கள் ஜெயந்தன் குருக்கள் என என பரம்பரையாய் நீளும் அந்தணப் பெருமக்களின் ஆசீர்வாதத்துடன் மதிப்புக்குரிய திருவாளர் கௌரி பாலா அவர்களது தலைமையிலான நிர்வாகத்தினரால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பொலிவு கண்டு காணக் கண் கோடி வேண்டும் என்கின்ற கருத்து நிலைக்கேற்ப ஆலயம் புதிய வடிவு எடுத்து நிற்கிறது.
பெருங் கோயில் ஒன்றின் பொலிவோடு பெருநகரின் பேரருளாளராக எம்பெருமான் எழுந்தருளியுள்ளார்.
எத்தனை துயர்கள் எம்மை சூழ்ந்த போதும் எத்தனை வலிகள் எதிர்கொள்ளப்பட்ட போதும் உன்னோடு நான் இருக்கின்றேன் என்கின்ற வேலவனின் ஓம் என்னும் பிரணவப் பொருள் மண்ணின் நம்பிக்கையாய் எழுந்து நிற்கின்றது.
கந்தசுவாமி பெருங்கோயில் எமது வாழ்வு எமது செழிப்பு எமது மேன்மை எமது பண்பாடு எமது நிலைக்களன் எமது நம்பிக்கை. எல்லாமுமே நீ தான் முருகா மகா கும்பாபிஷேக பெருவிழா காண்போம் அனைவரும் வருக இறை அருள் பெறுக .