ஆறுதிருமுருகன் விவகாரம்: உதயனுக்கு நீங்களே சமாதி கட்டி விடாதீர்கள்! கம்பரவாரதி ஜெயராஜ் சரவணபனிற்கு பகிரங்க கடிதம்

#SriLanka
Mayoorikka
4 months ago
ஆறுதிருமுருகன் விவகாரம்: உதயனுக்கு  நீங்களே சமாதி கட்டி விடாதீர்கள்!  கம்பரவாரதி ஜெயராஜ் சரவணபனிற்கு பகிரங்க கடிதம்

செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் நடத்திய சிறுவர் இல்லங்கள் தொடர்ப்பினான் பற்றிய செய்தி அண்மையில் பேசுபொருளாகியிருந்த நிலையில் உதயன் பத்திரிகை அவருக்கெதிராக தலைப்புச்செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. 

 இந்தநிலையில் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் உதயன் பத்திரிக்கையின் இயக்குனர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் இற்கு கடிதம் ஒன்றை வெளியிட்டு முகநூலில் பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவு வருமாறு;

 உங்களை எப்படி விளித்து இக் கடிதத்தை ஆரம்பிப்பது என்று எனக்குப் புரியவில்லை. ஒரு காலத்தில் நீங்கள் எங்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர்தான் என்றாலும், இப்போது உங்களை நண்பர் என்று விளித்து எழுத என் உள்ளம் மறுத்து நிற்கிறது. 

காரணம், இப்போது நீங்கள் எங்களுக்கு மட்டும் அல்ல எவருக்குமே உண்மையான நண்பராக இல்லை என்பதுதான்!. நீங்கள் எப்படியும் இருந்துவிட்டுப் போங்கள்! நான் எங்களின் பழைய நட்பை நினைந்து உங்களை இடித்துரைப்பதற்காகவே இக் கடிதத்தை எழுதத் தொடங்குகிறேன். எனது இந்த முயற்சியால், எந்தப்பயனும் விளையப் போவதில்லை என, என் அறிவுக்குத் தெரிந்தாலும், என் கடமையாய் நினைந்து பயனை எதிர்பாராமல் இக் கடிதத்தைப் பொது வெளியில் எழுதுகிறேன்.

 வயதும், அனுபவமும் காலப்போக்கில் பலரையும் வலிமைப்படுத்தும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவை உங்களை வலிமைப்படுத்துவதற்குப் பதிலாக வக்கிரப்படுத்தி வருவதாகவே தோன்றுகிறது. அந்த எனது முடிவின் கடைசிச் சான்றாக, கடந்த 04.07.2024ஆம் திகதி உங்களது உதயன் பத்திரிகையில் வந்திருந்த தலைப்புச் செய்தி அமைந்து போயிற்று. அச் செய்தியைக் கண்டு மற்றைய தமிழர்களைப் போலவே நானும் பேரதிர்ச்சி அடைந்தேன். கடந்த தினங்களில் பயணம் ஒன்றில் இருந்ததால், உடன் எழுத நினைத்த கடிதத்தை, இப்பொழுதான் எழுத முடிகிறது.

 “செஞ்சொற்செல்வர்” கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களையும், அவர் நடாத்தி வரும் மகளிர் இல்லத்தினையும், இழிவு செய்யும் நோக்கத்தோடு அச் செய்தி திட்டமிட்டு வெளியிடப்பட்டிருந்தது. ஆறு.திருமுருகன் அவர்களைப் பற்றியும், அவரது சமய, சமூக, தமிழ்ப் பணிகள் பற்றியும் நான் சொல்லித்தான் உலகத்திற்குத் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை.

 தனி ஒரு மனிதாக நின்று, தன் சுயமுயற்சியால் அவர் செய்து வரும் அளப்பெரும் பணிகளை எடுத்துரைப்பதானால், இக் கட்டுரை பல பக்கங்களாக நீண்டுவிடும் என்பதால், எல்லோருக்கும் தெரிந்த அந்த விடயங்களை இங்கு மீளவும் வரிசைப்படுத்தாமல் விட்டுவிடுகிறேன். சுருங்கச் சொல்வதானால், பாராளுமன்ற உறுப்பினர்களாய் இருந்த உங்களைப் போன்றவர்கள், அரச நிதியில் சமூகத்திற்காகச் செய்த பணிகளைவிடப் பலமடங்கு பணிகளை ஆறு.திருமுருகன் நம்மினத்திற்காகச் செய்திருக்கிறார்.

 தெல்லிப்பழை துர்க்கையம்மன்ஆலயத்தில் தொடங்கிய அவரது பணிகள், பின்னர் யாழ்ப்பாணம் அளவாய் விரிந்து, இன்று இலங்கை பூராகவும் பரவியிருக்கிறது. இந்த உண்மையைச் சாதாரண ஒரு தமிழ்ப் பாமரனும் அறிந்துள்ள நிலையில், பத்திரிகைத் துறை சார்ந்த உங்களுக்கு அவரது பெருமை தெரியாமல்ப் போனது ஆச்சரியம் தருகிறது. ஆறு.திருமுருகனின் பெயரை வலிந்து இணைத்தும், அவரது தனி ஒழுக்கம் பற்றி மற்றவர்களுக்கு ஐயம் ஏற்படும் வகையிலும், மிகக் கொடூரமான வக்கிரத்துடன், உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்றை வேண்டுமென்றே திட்டமிட்டு வெளியிட்டிருந்தீர்கள்.

 சமூகத்தின் முக்கியமான ஒருவர் பற்றிய, உறுதிப்படுத்தப்படாத செய்தியை, தலைப்புச் செய்தியாக இடுமளவிற்குத்தான், உங்களது பத்திரிகைத்துறை அனுபவம் இருக்கிறதா? என நினைந்து ஆச்சரியப்படுகிறேன்.

 பத்திரிகையை நீங்கள் சமூக வளர்ச்சிக்காக அன்றி உங்களின் வளர்ச்சிக்காகவே நடாத்தி வருகிறீர்கள். சமூகமா?, வீடா? என்ற ஓர் நிலை வந்தால் சமூகத்தைத் தூக்கிக் குப்பைக்கூடையில் போட்டுவிட்டு வீட்டை வளர்க்கத் துணிபவர் நீங்கள். 

உங்களின் இந்தச் சுய உருவம் இன்னும் பலருக்குத் தெரியவில்லை. நீங்கள் வெளியிட்ட ஆறு.திருமுருகன் பற்றிய வக்கிரச் செய்திக்குப் பின்னாலும் கூட, வீட்டை வளர்க்கும் உங்களது சுயநலம் பதிவாகியிருப்பதை நான் அறிவேன்.

 போர்க் காலத்தில், டாக்டர் யோகு பசுபதி அவர்களின் பலகோடி பெறுமதியான இல்லத்தை, இயக்கங்களிடம் இருந்து காப்பாற்றித் தருகிறேன் எனக் கூறி, வாடகைக்கு எடுத்த நீங்கள், போர் முடிந்த பின்பு அவரது வாரிசுகள் அவ் வீட்டு உரிமையை மீளக் கேட்டபோது, அதனை அவர்களிடம் கொடுக்காமல் அச் சொத்தை “விழுங்கிவிட” முற்பட்டீர்கள்.

 ஒன்றும் செய்ய முடியாத அக்குடும்பத்தினர், அந்த வீட்டை அறப்பணிகளுக்கு எனத் திருமுருகனின் “சிவபூமி” அறக்கட்டளைக்கென எழுதிக் கொடுத்துவிட, அச் சொத்தை விழுங்கிவிட நினைத்த உங்களது எண்ணம் கனவாயிற்று. அதன் பின்பும் அச் சொத்தைச் தரமாட்டேன் என்று நீங்கள் பிடிவாதம் பிடிக்க, அண்மையில்த்தான் திருமுருகன் உங்களுக்குத் தனது சட்டத்தரணி மூலம் “நோட்டீஸ்” அனுப்பியிருந்தாராம்.

 உங்களது “சுத்துமாத்து” வேலைகளுக்கு அஞ்சாமல் உறுதியாய் நின்ற திருமுருகன் மேல் உங்களுக்கு ஏற்பட்ட கோபமே, இப்போது உங்களது பத்திரிகையின் தலைப்புச் செய்தியாய் வெளிவந்திருக்கிறது. நண்பரே! உங்கள் பத்திரிகையின் ஊடாக மட்டுமே மக்கள் உலகத்தைப் பார்த்து வந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது இணையத்தளங்களில், நிமிட நேரங்களில் “சுடச்சுடச்” செய்திகள் பரிமாறப்பட்டு வரும் சூழ்நிலையில், பத்திரிகைகள் எல்லாம் தேவையற்ற விடயங்களாய் அன்றாடம் மாறிவரும் உண்மையை நீங்கள் மறந்துவிட்டீர்கள்.

 அதனால்த்தான் அரசியற் தலைவர்கள், சமூகப் பணியாளர்கள், நிறுவனத் தலைவர்கள், பொது நிறுவனங்கள், அறிஞர்கள் எனப் பலதரப்பட்டோரையும் உங்கள் பத்திரிகையின் பொய்ச் செய்திகளால் மிரட்டி, அடிபணிய வைத்துக் “கோலோச்சிய” காலம் முடிந்துவிட்டதை இன்னும் உணராமல் இருக்கிறீர்கள். கடந்த காலங்களில், பழிவாங்கும் பொய்மைச் செய்திகளால் மற்றவர்களை வீழ்த்திக் காரியம் சாதித்துப் பழக்கப்பட்ட உங்களுக்கு, ஊடகங்கள் மக்கள் வயப்பட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் இனி அது நடக்காத காரியம் எனும் உண்மை புரியவில்லை.

 அது புரியாத காரணத்தால்த்தான், “காலாவதி” ஆகிவிட்ட அதே பழைய அஸ்திரத்தை இன்னும் உங்களது எதிரிகள் மேல் ஏவ முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஊகத்தின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்படாத ஓர் செய்தியைத் தலைப்புச் செய்தியாய் இட்ட நீங்கள், வேண்டுமானால் பலராலும் பேசப்படும் பின்வரும் செய்திகளைக் கூட உங்கள் பத்திரிகையின் தலைப்புச் செய்திகள் ஆக்கலாமே!. 

உங்களுக்காக அச்செய்திகளைச் சுருக்கித் தருகிறேன். • “ஷப்றா” நிதிநிறுவனம் என்ற ஒன்றை ஆரம்பித்து, ஏழை மக்களின் பணத்தை “ஏப்பம்” விட்டு, சரவணபவன் வாழ்ந்து வருகிறார் என்பது அச்செய்தியில் ஒன்று. • தங்களது பெண்பிள்ளைகளின் கல்யாணத்துக்காகச் சிறுகச்சிறுகச் சேர்த்த பணத்தை “ஷப்றா” நிறுவனத்தில் இட்ட பலர் அது தொலைந்துபோக, துயரம் தாழாமல் தூக்கிட்டுக் கொண்டார்கள் என்பது மற்றொன்று. • சரவணபவன், மக்களை ஏமாற்றியதோடு அல்லாமல், “ஷப்றா” நிதிநிறுவனத்தை ஆரம்பித்துத் தன்னிடம் ஒப்படைத்த, மைத்துனரைக் கூட ஏமாற்றி “மொட்டை” அடித்து ஊரை விட்டு ஓடச் செய்தார் என்பது இன்னொன்று.

 • சரவணபவன், ‘உதயன்’ என்கின்ற பத்திரிகையை ஆரம்பித்ததன் மூலம், ஊடக அதிகாரத்தைக் கையில் வைத்து, பலரது வாய்களையும் அடைத்து, தன்னைப் பற்றிய இரகசியங்கள் வெளிவராமால் பார்த்துக் கொண்டார் என்பது வேறொன்று.

 • சரவணபவன், பத்திரிகைத் துறையில் அனுபவமும், ஆற்றலும் கொண்டிருந்த வித்தியாதரனை, ஆபத்து வரும் போதெல்லாம் தனக்குக் கேடயமாக பயன்படுத்திக் கொண்டார் என்பது மற்றொன்று.

 • தன்னை விட்டு வித்தியாதரன் விலகி விடமால் இருப்பதற்காகவும், அவர் ஆற்றலை முழுமையாய் உறிஞ்சிக் கொள்வதற்காகவும், மிகக் கெட்டித்தனமாக அவரது தங்கையையே திருமணம் செய்து, உறவுச் சங்கிலியால் அவரையும் கட்டிப் போட்டார் என்பது இன்னொன்று.

 • போர்க்காலத்தில் எல்லாம் வித்தியாதரனை முன் தள்ளிவிட்டுப் போர் முடிந்ததும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைச் சரவணபவன் தான் அபகரித்துக் கொண்டார் என்பது வேறொன்று.

 • இனத் துரோகிகள் பலர் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த அவ் வேளையில், வித்தியாதரனது உறவைப் பயன்படுத்திப் புலிகளை வளைத்துப் போட்டு, சரவணபவன் தப்பித்துக் கொண்டார் என்பது பிறிதொன்று.

 • நிதிநிறுவனத்தை மூடிய சரவணபவனுக்கு புதிய பத்திரிகை நிறுவனத்தைத் தொடங்கப் பணம் கிடைத்ததன் மர்மம் என்ன? அப் பணத்தை நிதிநிறுவனத்தால் நஷ்டப்பட்டவர்களுக்கு அவர் ஏன் பகிர்ந்தளிக்கவில்லை? இப்படிப்பட்ட துரோகிகளை புலிகள் மன்னித்தது எப்படி? என்பது வேறொன்று.

 • புலிகளின் தலைவர் பிரபாகரனையே உதயன் பத்திரிகைக்கான விளம்பரதாரியாகவும் பயன்படுத்திய மர்மத்தின் பின்னணி என்ன? என்பது மற்றொன்று.

 • யாழில் வெளிவந்து கொண்டிருந்த வேறுசில தமிழ்ப் பத்திரிகைகளின் மூடு விழாவிற்கு சரவணபவனே காரணராய் இருந்தார் என்பது இன்னொன்று.

 • போர் முடிந்து புலிகள் அழிக்கப்பட்ட பின்பு நடந்த தேர்தலில், தனது பத்திரிகைப் பலத்தைக் காட்டித்தான் கூட்டமைப்புக்குள் தனக்கான ஓர் “சீற்” றையும் சரவணபவன் பெற்றுக் கொண்டார் என்பது வேறொன்று.

 • அக் கட்சிக்கும் சரவணபவன் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை, தனக்குப் பிடிக்காத, தன் அணி சார்ந்த மற்றவர்களைக் கூடத் தோற்கடிப்பதற்குத் தனது பத்திரிகையை அவர் பகிரங்கமாகப் பயன்படுத்தினார் என்பது பிறிதொன்று.

 • சிங்களத் தலைவர்களுடனான தொடர்பு சிரச்சேதத்திற்கு உரிய குற்றம் என்னுமாற்போல் எழுதியும், பேசியும் வந்த சரவணபவன், சிங்கள ஐனாதிபதியை அழைத்து, யாழ்ப்பாணத்தில் தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட வைத்தார் என்பது மற்றொன்று. இப்படியாக ஊகத்தின் அடிப்படையில் இடக்கூடிய இன்னும் பல தலைப்புச் செய்திகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

 உங்களைச் சந்திக்க வருகிறவர்களிடம் பத்திரிகைத் தர்மம் பற்றி வகுப்பெடுக்கும் உங்களது பத்திரிகைத் தர்மம், எப்படியானது என்பதை எடுத்க்காட்ட இரண்டு சம்பவங்களை இங்கு குறிப்பிடவேண்டி உள்ளது. வாக்களிப்பு நிலையங்களுக்கு மக்கள் செல்லாமல் விடுவதற்காக, அவர்களை ஏமாற்ற நினைத்து நீங்கள், புரட்டாதிச் சனிக்கு எள் எரிக்கக் கோயிலுக்குப் போகும்படி வெளியிட்ட பத்திரிகைச் செய்தி இன்றும் இளைஞர்களால் நையாண்டியாகப் பேசப்பட்டு வருகிறது. இவ்வளவும் ஏன்? உங்களை எமது நண்பராக நினைத்திருந்த எங்களுக்குக்கூட நீங்கள் வஞ்சனை செய்யத் தவறவில்லை. 

கொழும்பில் நாங்கள் ஆலயம் கட்டியபோது அதற்கென நிதியுதவி வழங்க வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வருகையைப் பயன்படுத்தி, அவருக்கு நாங்கள் விலைபோய் விட்டதாகச் செய்திகள் வெளியிட்டு, எங்களை இனத் துரோகிகளாக அடையாளப்படுத்த முயன்றீர்கள்.

 அந் நிகழ்வின் உச்சகட்டமாக, “டக்ளஸ்” அவர்கள் எங்களின் இடத்திற்கு வருகை தந்திருந்த புகைப்படங்களை, உங்கள் பத்திரிகையில்; ஒரு பக்கம் நிறைய வெளியிட்டு, அவருக்கு நாங்கள் வாழ்த்துச் சொல்வதாக ஓர் பொய்யான விளம்பரத்தைத் தயாரித்து, அதனை நாங்கள் தான் வெளியிட்டோம் என மக்களை நினைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக அதன்கீழ் “கம்பன் குடும்பத்தார்” எனப் பெயரிட்டு நீங்கள் செய்த வக்கிர வேலைக்கு நிகரான ஓர் செயலை வேறு எந்தப் பத்திரிகையும் செய்திருக்குமா? என்று தெரியவில்லை.

 இப்படி வஞ்சகமாக நீங்கள் செய்த திருவிளையாடல்களை இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களைப் பொறுத்தவரை ஆற்றலாளர்கள் எவரானாலும் அவர்கள் உங்கள் கால்களை “நக்கிக்” கொண்டு உங்களிற்கு கீழேதான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவர்களுக்குத் தேவையானவற்றை அவ்வப்போது பிச்சையாக இட்டுக் கொண்டிருப்பீர்கள். உங்களை மீறி அவர்கள் செயல்ப்படத் தலைப்பட்டால் பின்னர் எந்த வகையிலேனும் அவர்களை “வேரறுக்கத்” தயங்க மாட்டீர்கள். இதுதான் உங்களது பாணி. நண்பரே! ஒன்றை மறந்து போகாதீர்கள்! 

சிலரைச் சில பேர் சில காலம் ஏமாற்றலாம். பலரைப் பலபேர் பல காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லாரையும் எக்காலத்திலும் எவராலும் ஏமாற்றிவிட முடியாது!.

 இவ்வுண்மையை வெகுவிரைவில் நீங்கள் உணரப் போகிறீர்கள். “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும்” என்றும் “அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்றும் நம் தமிழ்ப்புலவர்கள் சும்மா சொல்லி விட்டுப் போகவில்லை. திருமுருகன் மீதான உங்களது பழிவாங்கும் படலத்தில் பொது மக்களுக்குப் பல ஐயங்கள் எழுந்துள்ளன. இரண்டு நிறுவனங்களை மூடும்படி “கவர்னர்” உத்தரவிட்டதாய் நீங்கள் வெளியிட்ட செய்தியில், திருமுருகனது பெயரையும் அவரது நிறுவனத்தினது பெயரையும் வலிந்து சேர்த்திருக்கும் நீங்கள், மற்றைய நிறுவனத்தின் பெயரையோ, அதை நடத்துபவர்களின் பெயரையோ வெளியிடாமல் விட்டிருப்பது ஏன்? என மக்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

 இல்லங்களை மூடும் படி கவர்னர் உத்தரவிட்டதாக நீங்கள் வெளியிட்ட செய்தியினை, மறுநாளே “கவர்னர்” மறுத்திருக்கிறார். அதிலிருந்து அச்செய்தி பொய்ச் செய்தி எனத் தெரியவருகிறது. முக்கிய பிரமுகர் ஒருவரை இழிவுபடுத்தும் உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை, தலைப்புச் செய்தியாக இட்டிருக்கும் உதயன் பத்திரிகையின் மீது இலங்கையின் ஊடக நிறுவனம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? அறிய மக்கள் ஆர்வமாய் இருக்கிறார்கள். தான் சொன்னதாக ஓர் பொய்ச் செய்தியை வெளியிட்ட “உதயன்” பத்திரிகை மீது “கவர்னர்” இதுவரை எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்கமாலிருப்பது ஏன்? மக்கள் கேட்டு நிற்கிறார்கள்.

 ஒரு வேளை பலரும் சொல்லுமாற்போல் மதம் சார்ந்த ஒரு அரசியலுக்குள் கவர்னர் அகப்பட்டிருக்கிறார் என்பது நிஐம்தானா? இது மக்களின் அடுத்த கேள்வியாய் இருக்கிறது. திருமுருகனிடம் பல வகையிலும் பயன் பெற்ற பலரும், இன்று அவர்மேல் வீண்பழி சூட்டப்பட்டிருக்கும் நிலையில் மௌனம் காத்து நிற்பது வேதனை தருகிறது. நம் தமிழ்ச் சமூகம் யார் எதைச் செய்தாலும், “வீரமிலா நாய்களாய் நெட்டை மரங்கள் என நின்று புலம்பும் பெட்டைப் புலம்பல்” செய்வதை விட வேறெதுவும் செய்ய மாட்டார்கள் என்று நீங்கள் நினைத்து விட்டீர்கள் போல. மக்களின் அமைதி, புயலுக்கு முன் வரும் அமைதி. 

 அதைக் கண்டு நீங்கள் சந்தோசப்படாதீர்கள்.! பின்னால் வரப்போகும் புயலை நீங்கள் தாங்க மாட்டீர்கள். இன்று நீங்கள் பத்திரிகை நிறுவனத் தலைவர், சிறந்த வியாபாரி என்ற நிலைகளைத் கடந்து விரும்பியோ, விரும்பாமலோ மக்கள் பிரதிநிதியாகவும் மாறியிருக்கிறீர்கள். அதை நினைந்து நீங்கள் நடப்பதாய்த் தெரியவில்லை. உங்களது கேவலமான செயல்கள் உங்கள் கட்சியையும் பாதிக்கப் போவது நிச்சயம். நிறைவாக ஒன்றைச் சொல்லி முடிக்கின்றேன். 

திருமுருகனை வீழ்த்தவென நீங்கள் போட்ட சுருக்குக் கயிற்றில் இப்போது உங்களது கால்களே மாட்டிக் கொண்டிருக்கிறன. அண்மைக் காலமாக “வலம்புரி” யினது எழுச்சியையும், “உதயனது” வீழ்ச்சியையும் மக்கள் கண்கூடாகக் கண்டு கொண்டு தான் இருக்கிறார்கள். இந்நிலையில் உங்களது இழி செயல்களால் நீங்கள் தொடங்கிய “உதயனுக்"கு நீங்களே சமாதி கட்டி விடாதீர்கள்! எனக் கேட்டுக் கொள்கிறேன். இக்கடிதம் உங்களை நிறையக் காயப்படுத்தும் என்பது நிச்சயம். 

இதிலி ருக்கும் “செவிகைக்கும் சொற்களை” ஏற்றுத் திருந்தினால் அது உங்களுக்கு நல்லது. அதைவிடுத்து ஜெயராஜு க்கு எதிராக அடுத்த என்ன சூழ்ச்சி செய்யலாம்? என நினைக்கத் தொடங்குவீர்களே ஆனால், தர்மத்தின் சாட்டையடிக்கு விரைவில் ஆளாவீர்கள் என்பது மட்டும் நிச்சயம்.

அன்பன்,

 இ.ஜெயராஜ்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!