காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை கண்டறியப்பட்ட வேண்டும்: ஜுலி சங்
காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும் அதேவேளை, நிலைமாறுகால நீதியை முன்னிறுத்திய நியாயபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமென அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கத்தூதரகத்தின் அழைப்பின்பேரில் தூதுவர் ஜுலி சங்குக்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (11) மாலை கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் சார்பில் அதன் தவிசாளர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த மற்றும் நிறைவேற்றுப்பணிப்பாளர் சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் மற்றும் சவால்கள் தொடர்பில் அமெரிக்கத்தூதுவருக்கு விளக்கமளித்த அலுவலக அதிகாரிகள், அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இருதரப்புப் பங்காண்மை மற்றும் ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்வது குறித்து விரிவாக ஆராய்ந்தனர்.
அதேபோன்று மனிதப்புதைகுழி அகழ்வு உள்ளடங்கலாக காணாமல்போனோர் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் மனித எச்சங்களை ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய அவசியமிருப்பதனால், இவ்வனைத்து செயன்முறைகளுக்கும் அமெரிக்காவின் நிதி, தரவு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அதேவேளை காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படவேண்டியது அவசியம் எனும் தனது நிலைப்பாட்டை காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகளிடம் எடுத்துரைத்த அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், நிலைமாறுகால நீதியை முன்னிறுத்திய நியாயபூர்வமான நடவடிக்கைகளின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மேலும் இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமெரிக்கத்தூதுவர், 'காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விக்கான பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இலங்கையர்களுக்கு அதற்கான பதிலையும், ஆறுதலையும் வழங்குவதற்கு முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் அவசியமான ஒத்துழைப்பை வழங்க அமெரிக்கா தயாராக இருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.