கொலன்னாவை துப்பாக்கிச் சூடு - இருவர் கைது
கொலன்னாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களான 2 பேரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மித்தெனிய பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (09) கொலன்னா பொலிஸ் பிரிவில் தேயிலை தோட்ட உரிமையாளர் ஒருவரை அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் ராமநாயக்ககே இந்திக குமார என்று அழைக்கப்படும் 'கெலே மஹிந்த' மற்றும் ஜயவர்தன அபேசிங்க பத்திரனகே சந்தகெலும் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பின் போது 2 துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள், 100 கிராம் ஹெரோயின், துப்பாக்கிச் சூடு நடத்த வந்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் மற்றும் 3 கையடக்கத் தொலைபேசிகள் என்பன பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இந்த சந்தேக நபர்கள் தற்போது பிரான்சில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் வலையமைப்பை நடத்தி வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ரொட்டுவ அமிலவின் சகாக்கள் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைக்காக ரொட்டுவ அமிலவினால் 4 இலட்சம் பணமும் ஹெரோயின் போதைப்பொருளும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.