இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கவுள்ள 4.3 பில்லியன் டொலர்கள்!
இலங்கை சுற்றுலாத் துறையின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
தேசிய கொள்கைகள் மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது சுற்றுலா மற்றும் காணி அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட அதிகாரிகள் சுற்றுலாத் துறையின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் சமர்ப்பணமொன்றை (Presentation) முன்வைத்து விளக்கமளித்தனர்.
அதற்கமைய, அண்மைக்காலத்தில் 2018 இல் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததாகவும், இந்த ஆண்டும் அதே அளவான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என தாம் நம்புவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். விசேடமாக, இந்த ஆண்டில் சுற்றுலா பயணிகளின் வருகையின் மூலம் 4.3 பில்லியன் டொலர் அரசுக்குக் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
அதற்கமைய, சுற்றுலாப் பயணிக்களின் வருகையின் போது, அது சம்பந்தமான உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் எனக் குழு சுட்டிக்காட்டியது. அத்துடன், தற்பொழுது உலகில் அதிக சுற்றுலா ஈர்ப்பு கொண்ட மூன்று நாடுகளுக்குள் இலங்கை வந்திருப்பது தொடர்பில் அதிகாரிகளுக்கு குழு பாராட்டுக்களை தெரிவித்தது.
அத்துடன், சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் 2023 ஆம் ஆண்டின் செயலாற்றுகை அறிக்கை, இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் 2022 மற்றும் 2021 ஆண்டுகளின் ஆண்டறிக்கைகள், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி நிதியத்தின் 2021 ஆம் ஆண்டின் ஆண்டறிக்கை மற்றும் இலங்கை சுற்றுலா ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் 2021 ஆம் ஆண்டின் ஆண்டறிக்கை என்பவற்றுக்கு குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே மற்றும் கௌரவ நிபுண ரணவக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.