இராணுவமயமாக்கலை நியாயப்படுத்துவதற்கே யுக்திய நடவடிக்கை! அம்பிகா

#SriLanka
Mayoorikka
4 months ago
இராணுவமயமாக்கலை நியாயப்படுத்துவதற்கே யுக்திய நடவடிக்கை! அம்பிகா

நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இராணுவமயமாக்கலை சட்டபூர்வமாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், 'யுக்திய' நடவடிக்கையும் இராணுவயமயமாக்கலை நியாயப்படுத்துவதற்கான ஒரு திட்டமாகவே அமைந்திருப்பதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். 

 திட்டமிடப்பட்ட இராணுவமயமாக்கல், 'யுக்திய' நடவடிக்கையின் கீழ் இடம்பெறும் சட்டவிரோத கைதுகள் போன்றவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து கருத்து வெளியிட்டுவரும் அம்பிகா சற்குணநாதன், இவ்விடயம் தொடர்பில் மேலும் கூறியிருப்பதாவது:

 இலங்கையில், குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக சட்டம் மற்றும் கொள்கை உருவாக்கத்தில் இராணுவமயமாக்கலை சட்டபூர்வமாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. புனர்வாழ்வளித்தல் பணியக சட்டம், ஸ்ரீலங்கா டெலிகொம் திருத்தச் சட்டமூலம், குடியகல்வு சட்டமூலம் போன்றவற்றை அதற்கு உதாரணமாகக் குறிப்பிடமுடியும். அதேபோன்று போதைப்பொருளுக்கு எதிரான 'யுக்திய' நடவடிக்கையும் இராணுவமயமாக்கலுக்கு வாய்ப்பளிப்பதற்கும், அதனை நியாயப்படுத்துவதற்குமான ஒரு திட்டமாகவே அமைந்திருக்கிறது.

 அதேவேளை போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டோர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மீண்டுமொரு தடவை விமர்சித்துள்ளார். அதுமாத்திரமன்றி, பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பாதாள உலகக் குழுவினர் கொல்லப்பட வேண்டும் எனவும், அதனைச் செய்யும் பொலிஸாருக்கு நாமனைவரும் ஒன்றிணைந்து ஆதரவளிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

 அதன் மூலம் பொலிஸார் சட்டவிரோத படுகொலைகளில் ஈடுபடுகின்றனர் என்பதை அமைச்சர் ஏற்றுக்கொண்டிருப்பதுடன், அது தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களின் பிரகாரம் மிகப் பாரிய குற்றமாகும். ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் பொலிஸார் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதுடன், சட்டம் மீறப்படுவதற்கும் இடமளிக்கின்றனர். அரசாங்கம் தமது நடவடிக்கைகள் பாதுகாப்பானதும் அமைதியானதுமான இலங்கையை கட்டியெழுப்ப உதவும் எனக் கூறுகின்றது. 

ஆனால் அதற்கு முற்றிலும் எதிர்மாறான விடயங்களே நடைபெறுகின்றன. கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து பொலிஸாருடனான துப்பாக்கிச்சூட்டில் 5 பேரும், அடையாளம் தெரியாதோரின் துப்பாக்கிச்சூட்டில் 19 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். 

இவை 'யுக்திய' நடவடிக்கை மற்றும் அதன்போது பின்பற்றப்படும் உத்திகளின் பின்னணியிலுள்ள உண்மையான நோக்கம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது அமைச்சர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் பொறுப்புக்கூறலுடன் செயற்படுவதற்குப் பதிலாக, அவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கிறார்.

 அதேபோன்று அமைச்சர்கள் வன்முறை செயற்பாடுகளுக்கு பொதுமக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். இருப்பினும் அது சட்டவாட்சியையும், உரிமைகளின் பாதுகாப்பையும் முற்றிலும் சீர்குலைப்பதாகவே அமையும் என எச்சரித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!