ஜனாதிபதி வேட்பாளர்களோடு நிபந்தனைகளுடன் பேசுங்கள்! இந்திய உயர்ஸ்தானிகர்

#SriLanka
Mayoorikka
4 months ago
ஜனாதிபதி வேட்பாளர்களோடு நிபந்தனைகளுடன் பேசுங்கள்!  இந்திய உயர்ஸ்தானிகர்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அவர்களுடன் உங்களுடைய நிபந்தனைகளை முன்வைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுங்கள் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடனான சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். 

 இதேவேளை, எதிர்வரும் தேர்தலில் நிறுத்தப்படவுள்ள தமிழ் பொதுவேட்பாளரை மையப்படுத்தி இனப்பிரச்சினைக்காள தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினை இந்தியா அழுத்தமளிக்க வேண்டும் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் கோரியுள்ளது. 

 ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சியான புளொட்டின் தலைவர் சித்தார்த்தன் தவிர்க்க முடியாத காரணங்களால் பங்கேற்றிருக்கவில்லை. 

 இந்நிலையில், இந்த சந்திப்பில் ஜனநாய கூட்டணியின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், கோவிந்தன் கருணாகரம், வினோ நோகராதலிங்கம், வேந்தன், சிவநேசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். தமிழ் பொதுவேட்பாளர் இதன்போது சமகாலத்தில் நிகழ்கின்ற விடயங்கள் பற்றிய உயர்ஸ்தானிகரின் கேள்வியோடு கலந்துரையாடல் ஆரம்பமானது. 

அவ்வினாவுக்கு பதிலளித்த கூட்டணியின் அங்கத்தவர்கள், தென்னிலங்கையின் வேட்பாளர்களால் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகின்ற நிலைமைகளே காணப்படுகின்றன. அந்த வகையில் நாம் இம்முறை தமிழ் மக்களின் சார்ப்பில் ஒரு வேட்பாளரை களமிறக்கப்போகின்றோம். 

மூன்று பேர் தென்னிலங்கையில் போட்டியிடுகின்றபோது, பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக்கொள்வது மிகவும் கடினமான விடயமாகும். அதனை தென்னிலங்கையில் களமிறங்குவதற்கு தயாராகவுள்ள ரணில், சஜித், அநுர ஆகியோர் புரிந்துகொண்டுள்ளார்கள்.

 அதன் காரணத்தினாலேயே அவர்கள் தற்போது வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளுக்கு விஜயங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். ஆகவே அவர்களுக்கு தமிழ்த் தரப்பு நோக்கி தற்போது வருகை தரவேண்டிய நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என்றனர். மூவருடன் பேசுங்கள் அதன்போது, உயர்ஸ்தானிகர், தென்னிலங்கையில் மூன்று வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளதால் நீங்கள் (ஜ.த.தே.கூ) அவர்களுடன் உங்களது நிபந்தனைகளை முன்வைத்து பேசுங்கள் என்று குறிப்பிட்டார்.

 அதற்குப் பதிலளித்த கூட்டணியினர், அநுரகுமார இப்போது மாகாண சபைகள் பற்றிப் பேசினாலும் அவர்கள் மாகாண சபைக்கான அதிகாரங்கள் தொடர்பில் கூட தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக தெரியவில்லை. ஏலவே அவர்கள்தான் வடக்கு, கிழக்கு பிரிக்கப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளனர். 

 ஆகவே அவர்களை ஆதரிப்பது முரணான நிலைப்பாடாகவே காணப்படும். அடுத்து சஜித் பிரேமதாச இதுவரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட தமிழ் மக்களின் விடயங்கள் சம்பந்தமாக கரிசனைகளைக் கொள்ளாதிருந்த நிலையில் தற்போது 13ஆவது திருத்தச்சட்டம் பற்றி கூறுகின்றார். அது கூட காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாத வகையில் மாகாண சபை முறைமையை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கின்றார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கூட, 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் செல்வதற்கு தயாரில்லை. 

மறைந்த சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் உங்கள் முன்னிலையில் கூட அவர் காணி, பொலிஸ் அதிகாரங்கள் அற்ற மாகாண சபை முறைமை அமுலாக்கம் குறித்தே உரையாற்றியிருந்தார். ஆகவே மூன்று வேட்பாளர்களும் 13ஆவது திருத்தச் சட்டத்தினைக் கூட முழுமையாக முன்னெடுப்பதற்கு தயாரில்லாத நிலையில் தான் உள்ளார்கள். அவ்வாறான நிலையில் அவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதில் பயனில்லை. அதேநேரம், அவர்களும் தென்னிலங்கையில் தங்களது வாக்குவங்கி சரிந்துவிடும் என்பதற்காக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தயாரில்லாத நிலைமையிலேயே உள்ளனர்.

 மேலும், தென்னிலங்கை தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வதாக இருந்தர் மூன்றாம் தரப்பின் தலையீட்டுடன் தான் பங்கேற்பது பொருத்தமானது. ஆனால் அதற்குரிய நிலைமைகளும் பூரணமான அளவில் சாதகமாக இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

 இந்தியாவுக்கு சந்தர்ப்பம் அத்துடன், எம்மைப் பொறுத்தவரையில் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியாவினால் மட்டுமே தலையீடுகளைச் செய்ய முடியும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். அவ்விதமான சூழலில் இந்தியாவும் பல சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கத்திடம் தமிழர்களின் தீர்வு விடயத்தில் கரிசனைகளை வெளிப்படுத்தியுள்ளபோதும் இலங்கை அரசாங்கம் நடைமுறையில் எதனையும் முன்னெடுத்ததாக இல்லை. ஆகவே, தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதன் ஊடாக தமிழ் மக்களின் பிரதிபலிப்புக்களை மையப்படுத்தி இலங்கை அரசாங்கத்திற்கு மேலதிக அழுத்தங்களை இந்தியாவினால் வழங்க முடியும். ஆகவே தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயமானது இந்தியா, இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு பொருத்தமான சந்தர்ப்பமாகும் என்றும் கூட்டணியினர் குறிப்பிட்டனர்.

 முதலீடுகள் மற்றும் இதர திட்டங்கள் இதனையடுத்து, இந்திய உயர்ஸ்தானிகர், வடக்கு, கிழக்கில் இந்தியா முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டார். விசேடமாக பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு, காங்கேசன்துறை துறைமுக ஆழப்படுத்தல் மற்றும் நிர்மாணங்கள், பருத்தித்துறை மீன்பிடி துறைமுக நிர்மாணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சம்பந்தமாகவும் வெளிப்படுத்தல்களைச் செய்திருந்தார். மேற்படி தகவல்களை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!