ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைப்பு: மனு இன்று விசாரணைக்கு
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டத்தரணி அருண லக்சிறி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று திங்கட்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடக் கோரி சட்டத்தரணி அருண லக்சிறி நேற்றுமுன் தினம் வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தார். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் இன்னும் முறையாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு சட்டத்தரணி தனது மனுவில் கோரியிருந்தார்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறும் அவர் கோரியிருந்தார். இந்நிலையில் தலைமை நீதிபதி தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்ககொள்ளப்பட்டதையடுத்து இன்றைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவுக்கு வரும் திகதி தொடர்பில் உயர் நீதிமன்றம் பொருட்கோடலை வழங்கும் வரை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தொழில்முயற்சியாளர் ஒருவராலும் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
எவ்வாறாயினும் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது கடந்த 8 ஆம் திகதி (07.24) உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடக் கோரி இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.