குறைக்கப்படுகின்றது மின்கட்டணம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு
மின்கட்டணத்தை 22.5 சதவீதம் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் 22.5% மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தீர்மானித்துள்ளது.
இந்த வருடத்தில் மின்சார கட்டண திருத்தத்திற்காக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை ஆய்வு செய்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடைபெற்ற பொதுக் கலந்தாய்வில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைக் கருத்தில் கொண்டு ஆணைக்குழு தனது முடிவை பின்வருமாறு அறிவித்தது. இதன்படி, வீடு, மத வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள், பொது நோக்கங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் என அனைத்து நுகர்வோர் பிரிவினரின் மின் கட்டணம் நாளை முதல் குறைக்கப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பிரேரணையின் மூலம் மொத்த மின் கட்டணத்தை 10 வீதமாகக் குறைப்பதற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், ஆணைக்குழு கட்டணங்களை 22.5 வீதமாகக் குறைக்க தீர்மானித்துள்ளது.