விவசாய நிலங்களை விடுவித்து வாழ்வாதாரத்துக்கு உதவுமாறு கிளிநொச்சி விவசாயிகள் வேண்டுகோள்!
போர்ச்சூழலில் பயிற்செய்கை மேற்கொண்ட தமது நிலங்களை விடுவித்து தமது வாழ்வாதாரத்துக்கு உதவுமாறு பள்ளிக் குடா செம்மண் குன்று பெரியகுளம் விவசாயிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
80களின் பிற்பகுதியில் விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட இந்த நிலங்களில் இடப்பெயர்வு வரை உற்பத்தி முயற்சிகளை தாம் மேற்கொண்டு வந்ததாக கமக்காரர் அமைப்பின் பிரதிநிதி யொருவர் தெரிவித்தார்.
மீண்டும் மீள் பயிற்செய்கைக்காக தமது இடங்களுக்கு வந்த போது வனவள பகுதியினரால் எல்லைக் கல் நாட்டப்பட்ட நிலையில் தாம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக மற்றொரு விவசாயி கவலையுடன் தெரிவித்தார்.
இக் குளத்தை சுற்றி சுமார் 100 ஏக்கர் நிலம் பண்படுத்தப்பட்டு சுமார் 70 விவசாயக் குடும்பங்களின் பிரதான வாழ்வாதாரமாக இந்த நிலங்கள் இருந்து வந்ததாகவும் இப் பகுதி எல்லைக் கல் நாட்டப்பட்டதால் தமது வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் பலரும் கவலை வெளியிட்டனர்.
இப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் துறைசார் அதிகாரிகளுடன் அங்கிருந்து தொடர்பு கொண்டு பூநகரி பிரதேச செயலகத்தில் இதற்கான சந்திப்பை அதிகாரிகளுடன் நடாத்தி இந் நிலங்களை மீண்டும் பயன்படுத்த வழிவகைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
பள்ளிக்குடாவின் கட்சி செயற்பாட்டாளர்களான தோழர்கள் ராசகுலம் மற்றும் எட்வேர்ட் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச் சந்திப்பில் பூநகரி வடக்கு பிரதேச அமைப்பாளர் தோழர் ரஞ்சன் மற்றும் கமக்காரர் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.