விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு வட்டியில்லாக் கடன்!
விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக விவசாய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் கையெழுத்திடப்பட்டது.
முதல் கட்டத்தில், இந்த வேலைத்திட்டத்திற்கு பங்களிப்பை வழங்கும் இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன், விவசாய, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார்.
இதன்படி எதிர்காலத்தில் மக்கள் வங்கியுடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது. விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக முன்னோடித் திட்டங்களை நடைமுறைப்படுத்த தெரிவு செய்யப்பட்ட 26 பிரதேச செயலகங்களில் விவசாய நவீனமயமாக்கல் நிலையங்கள் ஊடாக வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த தலா 25 மில்லியன் ரூபா வீதம் 650 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக 10 மில்லியன் ரூபா பெறுமதியான விவசாய நவீனமயமாக்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்த 75 பிரதேச செயலகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.