நுகர்வோர்களாக மாறியுள்ள வாக்காளர்கள்! தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஆதங்கம்
தேர்தல் வேட்பாளர்கள் தேர்தல் காலங்களில் தானங்களை நடத்தி, பொருட்களை விநியோகித்தல் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்குவதனால் வாக்காளர்கள் தற்போது நுகர்வோர்களாக மாறியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கவலை வெளியிட்டுள்ளார்.
அரசியல் கல்வியறிவு இன்மையால் வாக்காளர் இவர்களிடம் சிக்குவதாக அவர் சுட்டிக்காட்டினார். 2023 ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தொடர்பில் தென் மாகாண அரசாங்க அதிகாரிகள், தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு, தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டம் நிச்சயமாகப் பயன்படுத்தப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்ட போதிலும் அவை தற்போது இல்லை என சுட்டிக்காட்டிய அவர், தற்போது கட்சிகள் முன்வைக்கும் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், பணம் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்றும், பணத்தைப் பயன்படுத்துவதற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “பணமில்லாமல் அரசியல் செய்ய முடியாது..
ஆனால் அதற்கு ஒரு எல்லை இருக்க வேண்டும். இன்று வாக்காளர்களை விலைக்கு வாங்குவதற்கு பணம் செலவழிக்கப்படுகிறது. அந்தச் செலவுகளை மட்டுப்படுத்தவே இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டது. ஏதாவது கொடுத்தால்தான் வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர் நினைக்கிறார்.
சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதன்படி, அனைத்து எதிர்கால தேர்தல்களுக்கும் இந்த சட்டம் பயன்படுத்தப்படும்.” எனத் தெரிவித்தார்.
இதேவேளை, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் (சட்ட விசாரணைகள்) சிந்தக குலரத்ன மற்றும் சன்ன டி சில்வா (திட்டமிடல் பணிப்பாளர்) ஆகியோர் இந்த புதிய சட்டம் குறித்து அங்கிருந்த மக்களுக்கு அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.