ஜீவன் தொண்டமானின் மீது நீதிமன்ற நடவடிக்கை: பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட தொழிலாளாளர்கள்!
நுவரெலியா மாவட்டத்தில் இயங்கும் களனி வெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்துக்கு சொந்தமான அனைத்து பெருந்தோட்டங்களிலும் தொழிலாளாளர்கள் தமது வழமையான தேயிலை தொழிலை ஸ்தம்பித்தப்படுத்தி பணிபுறக்கணிப்பில் செவ்வாய்க்கிழமை (23) காலை ஈடுப்பட்டுள்ளனர்.
இரண்டு முக்கிய காரணங்களை முன் வைத்து இந்த பணிப்புறக்கணிப்பில் செவ்வாய் கிழமை(23) தொழிலாளர்கள் இறங்கியுள்ளனர். 1,700 ரூபாய் சம்பளத்தை தர மறுக்கும் களனிவெளி கம்பனி தொழிலாளர்கள் அடி வயிற்றில் அடித்து அடாவடி போக்கை கடைப்பிடிப்பதாகவும், இத்தகைய அடாவடியை கண்டித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய இந்த கம்பனி நடவடிக்கை எடுத்ததை கண்டித்தும் இந்த பணிபுறக்கணிப்பு செய்யப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
அந்த வகையில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் நுவரெலியா பீட்று தோட்டத்திற்கு கீழ் இயங்கும் பீட்று,லவர்சிலீப்,நேஸ்பி, மூன்பிளேன், மாகாஸ்தோட்ட,ஸ்கிராப் ஆகிய தோட்டங்களுடன் ஒலிபண்ட் மற்றும் நுவரெலியா டிவிஷன் ஆகிய தோட்டங்களிலும் தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
அதேபோல நானுஓயா பிரதேசத்தில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் எடின்புரோ,கிளாசோ,ஆடிவன், மற்றும் கிளாஸோ மேல் பிரிவு கீழ் பிரிவு ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களும் மற்றும் உடரதல்ல மேல் மற்றும் கீழ் பிரிவு தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களும் பணி பறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஹேலீஸ் பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ரதல்ல மேல்பிரிவு தொழிலாளர்களும், வங்கி ஓயா கீழ் பிரிவு தொழிலாளர்களும் பணிபுறக்கனிப்பில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.