ஜனாதிபதி தேர்தலில் முதன்முறையாக வரவுள்ள மாற்றம்!
ஜனாதிபதி தேர்தலில் முதன்முறையாக விழிப்புலனற்ற சமூகத்தினருக்காக விசேட தொட்டுணரக்கூடிய வாக்குச் சீட்டு (Tactile Ballot Paper) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார்.
வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத்குமார சுமத்திராரச்சி தலைமையில் கூடியபோதோ அதில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தல்களின் போது அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதைக் குறிக்கும் வகையில் விரல்களில் வர்ணம் பூசுவது அநாவசியமானது என்ற குழுவின் முன்னைய அறிவுறுத்தல் குறித்தும் இக்குழுவில் கவனம்செலுத்தப்பட்டது.
இதற்கு அமைய விரல்களில் பூசப்படும் வர்ணங்களை இறக்குமதி செய்வதைஇரத்துச் செய்வது குறித்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், இதனை இந்தச் சந்தர்ப்பத்தில் நடைமுறைப்படுத்தாதிருக்க அமைச்சரவை தீர்மானித்திருப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார்.
கைவிரல்களில் வர்ணம் பூசும் செயற்பாட்டை நீக்கினால் அதிக பணம், நேரம் மற்றும் உழைப்பு மீதப்படுத்தப்படும் என்பது இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதன்படி, தேர்தல் சட்டத் திருத்தம் தொடர்பான அனைத்து முன்மொழிவுகளையும் குழுவில் சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
மேலும், எதிர்வரும் தேர்தலில் இயலாமையுடைய நபர்களுக்காக மேலும் பல சாதகமானநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் முதன்முறையாக விழிப்புலனற்ற சமூகத்தினருக்காக விசேட தொட்டுணரக்கூடிய வாக்குச் சீட்டு (Tactile Ballot Paper) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
செவித்திறன் குறைபாடுள்ளசமூகத்தினருக்காக தேர்தல் தொடர்பான 320 சொற்களைக் கொண்ட புதிய சைகை மொழி சொற்களஞ்சியம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இயலாமையுடைய சமூகத்தின்செயல்பாடுகளுக்கு அணுகல் வசதிகள் உள்ளிட்ட அதிகபட்ச வசதிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.