பெரமுனவின் ஆதரவு கிடைக்காவிட்டால் ரணில் போட்டியிட மாட்டார்!

#SriLanka #Ranil wickremesinghe
Mayoorikka
1 month ago
பெரமுனவின் ஆதரவு கிடைக்காவிட்டால்  ரணில் போட்டியிட மாட்டார்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைக்காவிட்டால் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட மாட்டார் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார்.

 இதேவேளை ஜனாதிபதியுடன் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து சரத் பொன்சேகா மற்றும் ராஜித சேனாரட்னவை தவிர வேறு எவரும் இணைய மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றும் போதே துஷார இந்துநில் இவ்வாறு கூறினார். அவர் அதன்போது மேலும் கூறுகையில்,

 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் நாங்கள் உலக நாடுகளிடையே பின்னடைவிலேயே இருக்கின்றோம். வளங்கள் வரையறுக்கப்பட்டுள்ள எம்மைப் போன்ற நாடுகளில் இவ்வாறான தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் உலக நாடுகளுடன் தொழில்நுட்பத்தில் முன்னேற்றமடைய வேண்டும். எமது ஜனாதிபதிகள் காலத்திற்கு காலம் அரசியல் வாக்குறுதிகளை வழங்குகின்றனர். 

முன்னர் இலவச வை-பை தொடர்பில் கூறினாலும் இன்னும் பிள்ளைகளுக்கு தொலைத்தொடர்பு சமிக்ஞைகளை தேடி மரம் ஏறுமம் நிலைமை தொடர்கின்றது. இந்நிலையில் சஜித் பிரேமதாச நாடு முழுவதும் சக்வல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து நவீன வகுப்பறைகளை உருவாக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுகின்றார்.

 இதேவேளை நாடு பொருளாதார ரீதியில் பாதாளத்தில் விழுந்துள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுப்பதாக கூறி 7 மூளைகள் உள்ளவர் என பஸில் ராஜபக்‌ஷ பொறுப்பேற்று பொருளாதாரத்தை இன்னும் பாதாளத்திற்குள் தள்ளினார். அதேபோன்று மூளைகளால் நிரைந்த கப்பல் என்று கூறப்பட்ட ரணில் விக்கிரமசிங்க சர்வதேசம் போன்றவற்றிடம் கடன்களை பெற்று அப்பாவி மக்களிடையே சீர் செய்யவென வரிகளை அறவிட்டு பொருளாதாரத்தை இன்னும் குழப்பத்திற்குள் கொண்டுவந்தார்.

 இப்போது அரசியலில் பல்வேறு செயற்பாடுகளை அந்த ஜனாதிபதி செய்கின்றார். தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கும் நிலையில் 22ஆவது திருத்தம் என புதிய பந்தை உருட்டுகின்றார். தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை குழப்பவே இவ்வாறு செய்கின்றார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைக்காத நிலைமையே உள்ளது. அங்கே நாமல், பிரசன்ன ரணதுங்க என்று குழுக்கள் உருவாகியுள்ளன. 

இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைக்கவில்லை என்ற பிரச்சினையை நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள் அதில் எமது எம்பிக்களை இழுக்க வேண்டாம். உங்கள் பக்கம் வருவதென்றால் சரத்பொன்சேகாவும் ராஜித சேனாரட்னவும் மட்டுமே வரலாம். அவர்கள் இருவரும் எங்கள் அரசியல் நடவடிக்கையில் இருப்பவர்கள் அல்ல. அவர்கள் குழாயொன்றில் சிக்கியுள்ளனர். 

பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைக்காவிட்டால் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட மாட்டார். அவர் போட்டியிடாவிட்டால் ராஜித, பொன்சேகாவுக்கு போக இடமிருக்காது. எவ்வாறாயினும் எமது எம்.பிக்கள் எவரும் வர மாட்டார்கள். ஆனால் வரும் 8ஆம் திகதி 35 பேர் எங்களுடன் கூட்டணி அமைக்கவுள்ளனர். இதன்படி வருபவர்கள் சஜித்தின் முகாமுக்கே வருவார்கள் என்றார்.