தமிழர்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பில் சிங்களவர்களுக்கு எடுத்துரைத்த மாமனிதர் விக்கிரமபாகு கருணாரட்ன: சிறிதரன்

#SriLanka #Parliament #sritharan
Mayoorikka
1 month ago
தமிழர்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பில் சிங்களவர்களுக்கு எடுத்துரைத்த மாமனிதர் விக்கிரமபாகு கருணாரட்ன: சிறிதரன்

தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு, தமிழர்கள் இந்த நாட்டில் தங்களுக்கு உரித்தான தனி தேசமாக வாழ உரித்துடையவர்கள் என்று மிக ஆணித்தரமாக சிங்களவர்களுக்கு எடுத்துரைத்த மிக சிறந்த மாமனிதரான சிறந்த முற்போக்கு அரசியல்வாதியான விக்கிரமபாகு கருணாரட்னவை தமிழர்கள் இழந்துள்ளதாக கருதுகிறோம்.

அவரது மறைவுக்கு இந்த உயரிய சபை ஊடாக ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற பொருளாதார நிலைமாற்ற சட்டமூலம், அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இந்த நாட்டில் சிறந்த இடதுசாரி கொள்கையுடையவராக வாழ்ந்து, மண்ணோடும், மக்களோடும் வாழ்ந்த நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மண்ணில் இருந்து விடைப் பெற்றுள்ளார்.

 81 ஆவது வயதில் காலமான விக்கிரபாகுவை இந்த சபையில் நினைவு கூர்கிறேன்.சிறந்த இடதுசாரி கொள்கைவாதியும், நவசமசமாஜக் கட்சியின் தலைவரும், ஈழத் தமிழர் உரிமை நிலைப்பாட்டில் இறுதி வரை ஒரே நிலைப்பாட்டை கடைப்பிடித்த முற்போக்கு அரசியல்வாதியான விக்கிரமபாகு கருணாரட்னவின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். தமிழர் பிரச்சினையில் ஒரே கொள்கையை கடைபிடித்து அது தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்தவர் .சிங்கள தேசிய இனத்தில் பிறந்த இனவாதமற்ற பெருமனிதர்.

இந்த நல் மனிதரை இந்த தேசம் இழந்துள்ளது. தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு , தமிழர்கள் இந்த நாட்டில் தங்களுக்கு உரித்தான தனி தேசமாக வாழ உரித்துடையவர்கள் என்று மிக ஆனித்தனமாக சிங்களவர்களுக்கு எடுத்துரைத்த மிக சிறந்த மாமனிதரை தமிழர்கள் இழந்துள்ளதாக கருதுகிறோம் என்றார்.