ரணிலுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் சிலர் தனக்கும் ஆதரவு தெரிவித்தனர்: நாமல்
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக சென்ற சிலர் தனது வீடுகளுக்கு வந்து ஆதரவு தெரிவித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை (30) காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு விசேட கருத்து வெளியிடும் போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு இவ்வாறான விடயங்கள் விசேஷமானவை எனினும் எனது தந்தை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்ற முதியவர்களுக்கு இவ்வாறான விடயங்கள் சகஜம் என தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, தான் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் முகாம்களை பாதுகாப்பதற்காக செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான முகாமில் இருப்பதால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான வரலாற்று ரீதியான எதிர்ப்பை அது தொடர்ந்தும் பிரதிநிதித்துவப்படுத்தும் என்றார்.
ஜனாதிபதித் தேர்தலில் தனது தந்தை இல்லாத காரணத்தினால் பொதுமக்களுடன் பேரம் பேசபடுவதாகவும், இந்த சந்தர்ப்பத்தை சிலர் விருப்பு சேகரிப்பு வாய்ப்பாக பயன்படுத்த தயாராக இருப்பதாகவும் தெரிகிறது என்றார்.