ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்த ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு!
உயர்நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையான இடைக்காலத்துக்கு பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு அரசியலமைப்பில் இடமளிக்கப்பட்டிருப்பதுடன், பொலிஸ் சேவையில் ஈடுபடும் பெரும் எண்ணிக்கையானோரில் அதற்குப் பொருத்தமான ஒருவரைத் தெரிவுசெய்யமுடியும்.
மாறாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோர் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உயர்நீதிமன்றத்துக்கு எதிராகக் குழப்பம் விளைவிப்பதற்கு முற்படுவார்களேயானால், ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நாட்டுக்கு மிகமோசமான சேதம் ஏற்படும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன, தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றுவதற்கு இடைக்காலத்தடைவிதித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எவ்வித சட்டவலுவும் கிடையாது என்பதால் அதனை ஏற்கமுடியாது எனவும், அரசியலமைப்புப்பேரவையின் அதிகாரத்தை நீதிமன்றத்தினால் சவாலுக்கு உட்படுத்தமுடியாது எனவும் தெரிவித்தார்.
அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தான் போட்டியிடவிருப்பதால் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய பதில் பொலிஸ்மா அதிபரொருவரை நியமிப்பதிலிருந்து தான் விலகியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் அறிவித்தார். அதுமாத்திரமன்றி தேசபந்து தென்னக்கோன் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு முரணான கருத்துக்களையும் அவர் வெளியிட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் உயர்நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளும் வகையிலான இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் அரசியலமைப்புப்பேரவையின் தீர்மானங்களை உயர்நீதிமன்றத்தினால் சவாலுக்கு உட்படுத்தமுடியாது எனக் குறிப்பிட்டார். அவரது இந்தக் கருத்து சரியானதெனின், அரசியலமைப்பைவிட அரசியலமைப்புப்பேரவை மேலோங்கியிருப்பதாகவே கருதவேண்டியிருக்கும்.
ஆனால் எந்தவொரு சட்டத்தினதும் அரசியலமைப்பு ஏற்புடைமை, அரசியலமைப்பின் பிரகாரம் இயங்கும் எந்தவொரு தரப்பினராலும் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அரசியலமைப்பு ஏற்புடைமை என்பன தொடர்பில் இறுதித்தீர்மானத்தை மேற்கொள்ளல் உயர்நீதிமன்றத்தின் கடமையாகும். இலங்கையின் அரசியலமைப்பானது அதிகாரப்பகிர்வுசார் கோட்பாடுகளை உறுதிப்படுத்தும் தொடர் பாரம்பரியத்தை அடிப்படையாகக்கொண்டிருக்கிறது.
எனவே அரசியலமைப்பின் அனைத்து சரத்துக்களும் அதிகாரப்பகிர்வு, சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக அடிப்படைக்கோட்பாடுகள் ஆகியவற்றுக்கு உட்பட்ட விதத்திலேயே பொருள்கோடல் செய்யப்படவேண்டும்.
அதேபோன்று உயர்நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையான இடைக்காலத்துக்கு பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு அரசியலமைப்பில் இடமளிக்கப்பட்டிருப்பதுடன், பொலிஸ் சேவையில் ஈடுபடும் பெரும் எண்ணிக்கையானோரில் அதற்குப் பொருத்தமான ஒருவரைத் தெரிவுசெய்யமுடியும்.
மாறாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோர் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உயர்நீதிமன்றத்துக்கு எதிராகக் குழப்பம் விளைவிப்பதற்கு முற்படுவார்களேயானால், ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நாட்டுக்கு மிகமோசமான சேதம் ஏற்படும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.