வவுனியாவில் 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு: நடவடிக்கை எடுத்த அதிகாரசபை
வவுனியாவில் 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
யூலை மாதம் 1 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது சரியான தராசை பயன்படுத்தாமை, விற்பனைக்கு பொருளை மறுத்தமை, விலை அழிக்கப்பட்டிருந்தமை, விலை குறிக்கப்படாமை, காலாவதியான பொருள்களை வைத்திருந்தமை, தகவல் குறிக்கப்படாமை, உத்தவாதம் வழங்காமை போன்றன தொடர்பில் 54 வழக்குகளும், பேக்கரி தொடர்பில் 6 வழக்குகளுமாக 60 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வவுனியா நகரம், கோவில்குளம், வைரவபுளியங்குளம், குருமன்காடு, பட்டானிச்சூர், வேப்பங்குளம், நெளுக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலேயே மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை வவுனியா ஊடகவியலாளர்கள் சிலரால் வவுனியா பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் நடவடிக்கைகள் தொடர்பாக சமூகவலைத்தளங்கள் ஊடாக விமர்சனங்களை வைத்திருந்தனர் அதனை தொடர்ந்து மூன்று நாட்களுக்குள் 19 வழக்குகளை பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது