ஜனாதிபதி தேர்தல் 2024 : 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த தாம் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஆளுங்கட்சி கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான அராஜகம், வரிசை யுகத்தை ஏற்படுத்தாத சமூக, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார அபிவிருத்தியுடன் கூடிய வலுவான நாட்டை ஜனாதிபதியால் மட்டுமே கட்டியெழுப்ப முடியும் என்பதனால் நாட்டின் நலன் கருதி இந்த தீர்மானத்தை எடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டைப் பற்றி சிந்திக்காமல் சிறுபான்மையினரின் செல்வாக்கின் பேரில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தாங்கள் கஷ்டப்பட்டு கட்டியெழுப்பிய கட்சி நிராகரித்துள்ளதாக பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
தாங்கள் எடுத்த தீர்மானம் சரியானது என தற்போது முன்னாள் மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீதியில் கொல்லப்பட்ட போது, இரண்டு வருடங்களில் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு திரு.ரணில் விக்கிரமசிங்க உழைத்ததாகவும், அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை உடைக்காத ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.