மூன்று தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒரு வருட சிறை!
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , மூன்று படகுகளின் உரிமையாளர்களுக்கு தலா 04 மில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , பல்வேறு கால கட்டத்தில் கைதான 64 மீனவர்களின் வழக்கு விசாரணைகள் செவ்வாய்க்கிழமை (30) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் போது, ஜூன் மாதம் 16ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் கைதான 26 பேரில் மூவர் இரண்டாவது தடவையாக மீள கைதாகி இருந்தமையால் , அவர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஏனைய 23 பேரில் மூன்று படகுகளின் உரிமையாளர்களும் இருந்தமையால் , அவர்கள் மூவருக்கும் தலா 4 மில்லியன் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
தண்ட பணம் செலுத்த தவறின் , 06 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், மூன்று படகுகளையும் அரசுடமை ஆக்கப்பட்டுள்ளதாக மன்று கட்டளையிட்டது.
அதனை தொடர்ந்து கடந்த 01ஆம் திகதி கைது செய்யப்பட்ட 25 கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரையும் , கடந்த 11ஆம் திகதி கைது செய்யப்பட்ட 13 கடற்தொழிலாளர்களையும் 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.