கிழக்கில் போராடும் தாய் கொழும்பின் உத்தரவில் பயங்கரவாத பொலிஸாரால் விசாரணை

#SriLanka
Mayoorikka
3 months ago
கிழக்கில் போராடும் தாய் கொழும்பின் உத்தரவில் பயங்கரவாத பொலிஸாரால் விசாரணை

யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது அன்புக்குரியவர்களைக் கண்டறியும் நோக்கில் நீண்டகாலமாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தாய் ஒருவர், பயங்கரவாதப் பொலிஸாரினால் அழைக்கப்பட்டு நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

 ஜூலை 30ஆம் திகதி காலை 9.30 மணி முதல் மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், அன்றைய தினம் மாலை மட்டக்களப்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அமல்ராஜ் அமலநாயகி, கொழும்பில் இருந்து அனுப்பப்பட்டதாக தெரிவித்து பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் (CTID) மட்டக்களப்பு பிரிவு அதிகாரிகள், தம்மிடம் காட்டப்பட்ட சிங்கள கடிதக் கோப்புகளில் தான் பயங்கரவாதி என அடையாளப்படுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

 "அனுப்பட்டிருந்த அந்த பைலில் முற்றுமுழுதாக நான் ஒரு பயங்கரவாதியென எழுதப்பட்டிருந்தது. முழுமையாக எங்களை ஒரு பயங்கரவாதியாக முத்திரை குத்தி எங்களுக்கு உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தி, இந்த போராட்டத்தை நிறுத்த வேண்டும்.

" ஜூலை கடைசி வாரத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் 8 மாவட்டங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி போராட்டம் நடத்தப்பட்டதுடன், ஜூலை 30ஆம் திகதி, வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு தலைமைத் தாங்கிய வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவி, சிவானந்தன் ஜெனிட்டா, ஜனநாயக ரீதியில் போராடும் தமிழ்த் தாய்மார்களிடம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எந்த அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன என கேள்வி எழுப்பியிருந்தார்.

 “மட்டக்களப்பு மாவட்டத் தலைவி பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். 

பிடிஏ என்றால், நாங்கள் பயங்கரவாதிகளா எங்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்ய? ஜனநாயக ரீதியில் எமது உறவுகள் எங்கே எனக் கேட்டு போராடிக் கொண்டிருக்கின்ற பெண்களாக இருக்கின்ற நிலையில் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படுகின்றது.”

 முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி, ஜூலை 31ஆம் திகதி முல்லைத்தீவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி, போராடும் தாய்மாரை விசாரணை செய்வதை விடுத்து, தங்களின் அன்புக்குரியவர்களை கண்டுபிடிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.

 “ஒவ்வொரு மாவட்டத்திலும் போராடிக் கொண்டிருக்கும் தலைவிமாரை பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்து 4, 5 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்திக்கொண்டிருக்கின்றனர். 

நேற்றைய தினம் (ஜூலை 30) மட்டக்களப்பு மாவட்டத்தின் அமலநாயகி என்ற மட்டக்களப்பு மாவட்டத் தலைவியை 4 மணித்தியாலங்கள் விசாரணை செய்துள்ளனர். அவ்வாறான விடயங்களும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. 

அவ்வாறான விடயங்களை நிறுத்தி எங்களது உறவுகளை மீட்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” ஒழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுடன் உறவு 15 வருடங்களுக்கு முன்னர் அழிக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த விடுதலைப் புலிகளுடன் அவருக்கு தொடர்புள்ளதா என பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் மட்டக்களப்புப் பிரிவினர் தம்மிடம் கேள்வி எழுப்பியதாக வல்லிபுரம் அமலநாயகி என அழைக்கப்படும் அமலராஜ் அமலநாயகி தெரிவிக்கின்றார்.

 "சர்வதேச அளவில் சரி உள்நாட்டு அளவில் சரி எல்டிடிஈ உறுப்பினர்களோடு உங்களது தொடர்புகள் எவ்வாறு இருக்கிறது, அவர்களுடன் நீங்கள் தொடர்பில் இருக்கின்றீர்களா? எனக் கேட்டார்கள். நான் சொன்னேன், தடை செய்யப்பட்ட இயக்கம் அல்லது அந்த இயக்கம் இல்லையெனக் கூறி நீங்கள்தானே சொன்னீர்கள்.

 பிறகு எப்படி எல்டிடிஈ என்ற பெயர் வருமென எனக்குத் தெரியாது. அதனை நீங்கள்தான் தேடிப் பார்க்க வேண்டும். அவ்வாறு எல்டிடிஈ என்ற பெயர் சொல்லிக்கொண்டு வருபவர்களுடன் எமக்குத் தொடர்பு இல்லை. அந்தப் பக்கத்தை நாங்கள் பார்க்கவும் இல்லை. 

அதனை நீங்கள் தேடிக் கண்டுபிடியுங்கள் எனச் சொன்னேன்.” புலம்பெயர் நிதியுதவி வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது அன்புக்குரியவர்களைக் கண்டறியும் நீண்ட போராட்டத்திற்கு புலம்பெயர் நாடுகளில் இருந்து பணம் கிடைக்கிறதா என தன்னிடம் கேள்வி எழுப்பிய பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் அதிகாரிகள், புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சிப்பவர் என்ற கோணத்திலும் தன்னிடம் விசாரணை நடத்தியதாக சுட்டிக்காட்டுகின்றார். “டயஸ்போரா இந்த போராட்டத்திற்கு காசு தருவதில்லையா எனக் கேட்டார்கள்.

 இதுவரை தரவில்லை எனச் சொன்னேன். தொடர்பு இருந்தால் தாங்கள் என்றேன். இந்த விசாரணையின்போது என்னை பயங்கரவாதியாகவும், எல்டிடிஈ அமைப்பை மீள் உருவாக்கும் ஒருவராகவும், கடந்த காலத்தில் இவ்வாறான போராட்டங்களை செய்து அரசாங்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் ஒரு அமைப்பாகவும் கருதுகிறார்கள், அதுதான் அவர்களின் அபிப்பிராயமாக இருந்தது.” இவ்வாறான விசாரணைகளை மேற்கொள்வதன் மூலம் 2017 பெப்ரவரி மாதம் முதல் தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி கோரி தொடர்ச்சியாக போராடும் தாய்மார்களுக்கு அச்சம் ஏற்படும் என அரசாங்கம் நம்புவதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தவிசாளர் குறிப்பிடுகின்றார்.

 “சர்வதேச ரீதியான அழுத்தங்கள் இவர்களுக்கு வருவதால் எங்களை இப்படியான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி, உதாரணமாக நான் ஒரு விசாரணைக்கு வந்தால் நான்கு தாய்மார் அச்சத்தில் இதனை (போராட்டத்தை) விட்டுவிடுவார்கள். 

இந்த போராட்டத்தை அழிக்க வேண்டும் என்பதே ஒரேயொரு நோக்கம். இப்படியொரு காாணாமல் போனமை என்ற விடயம் இல்லை என்றதையும் ஏற்படுத்தி, மறப்போம், மன்னிப்போம் என்ற அடிப்படையில் கொணடுபோக வேண்டுமென்பதே இவர்களின் நோக்கம்.”

 பயங்கரவாதத் தடுப்புப் மற்றும் விசாரணைப் பிரிவினர் தாம் பிறந்த வைத்தியசாலை முதல் தமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரினதும் தனிப்பட்ட தகவல்களைப் பெற்றதாகக் கூறும் அமலநாயகி, பல்வேறு சந்தர்ப்பங்களில் தாம் நடத்திய போராட்டங்கள் தொடர்பான ஆறு புகைப்படங்களைக் காட்டி அவைத் தொடர்பான தகவல்களை கேட்டதாகவும் குறிப்பிடுகின்றார்.

 பெறுமதி இரண்டு இலட்ச ரூபாயா? கடந்த ஜூலை 29ஆம் திகதி திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் திருகோணமலை மாவட்டத் தலைவி செபஸ்டியன் தேவி, மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அமலநாயகி போன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏனைய தாய்மார்களுக்கும் பயங்கரவாத பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்படலாம் என எச்சரித்தார்.

 “ஜனாதிபதி ஆணைக்குழுக்களை கொண்டு வந்தார்கள் அதிலும் எதுவும் நடக்கவில்லை. இன்று மட்டக்களப்பு மாவட்டத் தலைவியை விசாரணைக்கு அழைத்துள்ளார்கள். நாளை எங்களையும் அழைக்கலாம்.” மன்னாரில் ஜூலை 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைத் தாங்கிய, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் மன்னார் மாவட்டத் தலைவி மனுவெல் உதயச்சந்திரா, காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் பெறுமதி இரண்டு லட்சம் ரூபாயா? என, காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்திடம் (OMP) கேள்வி எழுப்பினார். 

 “நாங்கள் வீதியில் நின்று கத்திக் கொண்டிருக்கின்றோம் ஆனால் யாருமே எங்களை திரும்பிப் பார்ப்பது போல் தெரியவில்லை. நீதி கிடைக்குமா தெரியவில்லை. ஒவ்வவொரு அம்மாக்களும் இறந்துகொண்டிருக்கின்றன. 

அப்படி இறக்கையில் ஒவ்வொரு சாட்சிகளும் இறந்துகொண்டு போகுது. அதைத்தான் இந்த அரசாங்கமும் விரும்புது. ஓஎம்பியை கொண்டுவரும்போது நான்கு பொறிமுறைகளை கொண்டுவந்தார்கள். அதில் உண்மையை கண்டறிவதாக சொன்னார்கள். 

உண்மையை கண்டறிய அவர்கள் என்ன செய்தார்கள். நட்டஈட்டுக்காக மாத்திரமே ஓஎம்பி முன்னிற்கிறது. நட்டஈட்டை பெற்றுக்கொண்டு இந்த அம்மாக்கள் வீட்டில் இருக்க வேண்டுமென்றே அவர்கள் நினைக்கின்றார்கள். எமது பிள்ளைகளின் பெறுமதி இரண்டு இலட்சமா? நாங்கள் நான்கு இலட்சம் தருகிறோம் எங்கள் பிள்ளைகளை தேடித்தாருங்கள் என்றுதான் நாம் கோருகின்றோம்.”

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!